
சென்னை: பருவக்கால பழங்களாக மாம்பழம், தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றை வாங்கும்போது மிகவும் கவனத்துடன் வாங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
ஏனெனில், பார்க்க பளபளவென இருக்கும் பழங்கள் ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையானது, பழங்களை கால்சியம் கார்பைட் கற்களை வைத்து பழுக்க வைப்பதை தடை செய்திருக்கிறது. ஆனால், பழங்களின் அடிப்படையில் 100 பிபிஎம் என்ற அளவில் எத்திலீன் வாயுவைப் பயன்படுத்தி பழுக்க வைக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், சில வணிகர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகப்படியான எத்திலீன் வாயுவைப் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது இவ்வாறு பழுக்கவைக்கப்பட்ட 8 டன் மாம்பழங்களை அழித்துள்ளனர். அதோடு, 8 டன் வாழைப்பழங்களும் அழிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கார்பைட் வைத்து பழுக்க வைப்பது குறைக்கப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலங்களிலிருந்து வருவது அதிகரித்துள்ளது என்கிறார் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஸ்குமார்.
முதல் முறை ரசாயனம் வைத்து பழங்களை பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.2000 முதல் 5,000 வரை. பிறகு அதுவே 10000 ஆக அதிகரிக்கும் தொடர்ந்தால் கிடங்குக்கு சீல்வைக்கப்படும். இவ்வாறு ரசாயனம் வைத்து பழக்க வைக்கப்படு பழங்களை உட்கொண்டால் வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்கிறார் ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர்.
ஒரு மாம்பழ பழுக்க 3 நாள்கள் வரை ஆகும். ரசாயனம் பயன்படுத்தினால் ஒரு நாளில் பழுத்துவிடும் என்கிறார் கோயம்பேடு காய்கறி சந்தை ஆலோசகர் வி.கே. சௌந்தரராஜன்.
சரி.. எப்படித்தான் கண்டுபிடிப்பது ரசாயனம் வைத்து பழுக்க வைத்த பழங்களை?
கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மாம்பழங்கள் அனைத்தும் ஒன்று போல ஒரே மஞ்சள் நிறத்தில் ஒரே அளவில் இருக்கும். ஆனால், மாம்பழத்தை எடுத்து முகர்ந்துப்பார்த்தால் பழத்தின் மணம் இருக்காது. அந்த பழங்களின் மேல் திட்டுத்திட்டாக கருப்பு நிறத்தில் ஒட்டியிருக்கும். இப்படி சரியாக பார்த்தால், கடையிலேயே பழங்களைக் கண்டுபிடித்துவிடலாம்.
ஒருவேளை வாங்கிய பழமாக இருந்தால் அந்தப் பழத்தை நறுக்கிப் பார்த்தால், கொட்டையிருக்கும் பகுதிக்கு அருகே வெள்ளை நிறத்தில் பழம் இருக்கும். இப்படியும் ரசாயனத்தில் பழுக்க வைத்தப் பழங்களைக் கண்டுபிடிக்கலாம்.
மற்றொரு வழியும் இருக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் மாம்பழங்களைப் போட்டால் அது நீருக்கு அடியில் செல்ல வேண்டும். ஆனால் மிதந்தால் அவையும் ரசாயனத்தில் பழுக்க வைத்தப் பழங்களே. சுவையும் இருக்காது.
இதுபோன்றே தர்பூசணி பழங்களும் மிக அழுத்தமான நிறம் இருக்கும். அவ்வாறு என்றால், பழத்துக்கு ஊசி போட்டு நிறமூட்டப்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
அப்படிப்பட்ட பழங்களை சாப்பிடும்போதுதான் வாய் மற்றும் நாக்கும் அந்த நிறத்துக்கு மாறும். ஒருவேளை பழத்தை நறுக்கியதும் வெள்ளை காகிதத்தை பழத்தைத் துடைத்தால் காகிதத்தில் நிறம் ஒட்டிக்கொள்ளும். அது நிச்சயம் நிறமூட்டப்பட்ட பழம்தான். அதனை சாப்பிட வேண்டும். அப்புறப்படுத்திவிடுங்கள். சாப்பிட்டால் உடலுக்கு தீங்க விளைவிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.