200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

உயிரிழந்த சகோதரரின் பெயரில் விமான டிக்கெட் முன்பதிவு செய்து திருடி வந்தது அம்பலம்.
200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளாக விமானங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை தில்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

தில்லியை சேர்ந்த ராஜேஷ் கபூர்(வயது 40) என்பவர் உயிரிழந்த அவரது சகோதரர் ரிஷி கபூர் அடையாளங்களை பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கடந்த 2005 முதல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் ரயில்களில் ராஜேஷ் திருடி வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் விமானங்களில் தனியாக செல்லும் முதியவர்களை குறிவைத்து, விமானம் ஏறும்போதே அவர்களின் கைப் பைகளில் இருந்து பணங்களையும், நகைகளையும் ராஜேஷ் திருடி வந்துள்ளார். விமானத்திலும் அடிக்கடி இருக்கையை மாற்றிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நடந்து கொண்டுள்ளார்.

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!
தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

ராஜேஷ் கபூர் பிடிபட்டது எப்படி?

ஏர் இந்தியா விமானங்களில் அமெரிக்கா சென்ற இரு பயணிகளிடம் இருந்து அடுத்தடுத்து ரூ. 7 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனதை தொடர்ந்து நடந்த தீவிர கண்காணிப்பில் ராஜேஷ் கபூரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

அமெரிக்கா செல்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் சுதாராணி பதூரி, அமிர்தசரஸில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் வரேந்திரஜீத் சிங் ஆகியோரிடம் இருந்து நகைகள் மற்றும் பொருள்கள் திருடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஹைதராபாத் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், இரண்டு விமான நிலையங்களிலும் ராஜேஷ் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால், விமான நிறுவனத்தில் போலி தொடர்பு எண் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தது தெரியவந்தது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ராஜேஷின் உண்மையான தொடர்பு எண்ணை கண்டறிந்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். இதில், மத்திய தில்லியின் பஹர்கஞ்ச் என்ற பகுதியில் நாள்தோறும் குறிப்பிட்ட சில நேரம் ராஜேஷின் தொடர்பு எண் செயல்படுவதை வைத்து அவரின் இருப்பிடத்தை உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சோதனை செய்த காவல்துறையினர் ராஜேஷை கைது செய்து விசாரித்ததில், அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பணம், இதர திருட்டு பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ராஜேஷிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய சரத் ஜெயின்(வயது 46) என்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, கடந்த ஓராண்டில் மட்டும் தில்லி, சென்னை, ஹைதராபாத் பெங்களூரு, மும்பை என இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணம் செய்து ராஜேஷ் கபூர் திருடி வந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com