
உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியினர் நாட்டு மக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக கொள்ளையடித்துள்ளதாக கூறினார்.
அமேதி, ரேபரேலி மக்களவைத் தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் ஸ்மிருதி ராணி மற்றும் தினேஷ் பிரதாப் சிங் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், ”இருவரும் கடுமையாக உழைத்து வருவதாகவும், மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வார்கள்” எனவும் கூறினார்.
இந்தியாக் கூட்டணியை கடுமையாக குற்றஞ்சாட்டிய அவர்,"நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் பிரதிஷ்டை சரியாக நடக்கவில்லை என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பாபரின் பெயரில் ராமர் கோயிலுக்கு பூட்டுப் போட்டுவிடுவார்கள்.
காங்கிரஸ் வாரிசு அரசியலை நடத்துகிறார்கள். லாலுபிரசாத் தனது மகனையும், மம்தா தனது மருமகனையும் முதல்வராக்கவும், சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கவும் விரும்புகிறார்.
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு எதிராக செயல்பட்டனர். ஆனால், மோடி அதை ரத்து செய்தார். அவர் நாட்டில் பயங்கரவாதத்தை நிறுத்தி பயங்கரவாதிகளை ஒழித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் எங்களுக்கு சொந்தமானது.
காங்கிரஸ் கட்சியினர் ஊழல்வாதிகள். இத்தனை வருடங்களாக நாட்டை கொள்ளையடித்துவிட்டார்கள். ஊழல்வாதிகளை எல்லாம் மோடி அரசு சிறையில் தள்ளும் நேரம் வந்துவிட்டது.
உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் கீழ் இரட்டை என்ஜின் ஆட்சியால் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு14 விரைவு சாலைகள், ஒரு மெட்ரோ நெட்வொர்க், மருத்துவக் கல்லூரிகள், திரைப்பட நகரம், பூங்கா போன்றவை கிடைத்துள்ளன” எனக் கூறினார்.
ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அந்தக் குடும்பத்தின் நெருங்கிய உதவியாளரான கிஷோரி லால் ஷர்மா, ஸ்மிருதி ராணிக்கு எதிராக களமிறங்கியுள்ளதால், அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.