
அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதற்கு, அக்னிவீர் பற்றி பேசக் கூடாதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து, மேலும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் வரும் நாள்களில் நடக்கவுள்ளன. தேர்தல் முடிவுகள் வருகிற ஜூன் 4 அன்று வெளியாகவுள்ளது.
சாதி, மதம், இனம், மொழி குறித்த அவதூறு பிரசாரங்களைத் தவிர்க்குமாறு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருந்தது.
கடிதத்தில், பாதுகாப்புப் படை குறித்து பேசுகையில் அவற்றை அரசியல் படுத்தக்கூடாது என்றும், ஆயுதப்படைகளின் சமூகப் பொருளாதார அமைப்பு குறித்து பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தது. அத்துடன், அரசியல் அமைப்பு அழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என்பது போன்றத் தவறான பிரசாரங்களைக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தவிர்க்குமாறு கூறியிருந்தது.
இதற்கு பதலளிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருப்பது மிகவும் தவறானது.
அரசியலாக்குவது என்றால் என்ன? விமரிசிப்பதை தேர்தல் ஆணையம் அரசிலாக்குவது என்று கூறுகிறதா?
அக்னிவீர் என்பது ஒரு திட்டம், மத்திய அரசின் கொள்கையால் உருவாக்கப்பட்ட திட்டம், இந்த திட்டம் மற்றும் கொள்கை குறித்து விமரிசிக்கவும், எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், அந்த திட்டத்தை ஒழிப்போம் என்று பிரசாரம் செய்யவும் ஒரு எதிர்க்கட்சியாக எங்களுக்கு உரிமை உள்ளது.
ஒன்றாக இணைந்து போராட வேண்டிய வீரர்களை இரண்டு பிரிவாக பிரிக்கிறது அக்னிவீர் திட்டம், இது மிகவும் தவறானது.
அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள், நான்காண்டு பணியாற்றிவிட்டு, வெளியே தூக்கி எறியப்படுவார்கள், அவர்களுக்கு எந்த வேலையும், ஒய்வூதியமும் வழங்கப்படாது, இது மிகவும் மோசமான திட்டம்.
நமது ராணுவமே, இந்த அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கிறது, ஆனாலும் மத்திய அரசு இந்திய ராணுவத்தின் மீது இந்த திட்டத்தை திணிக்கிறது, இதுவும் மிகவும் தவறான செயல்.
எனவே, அக்னிவீர் திட்டம் நிச்சயம் அகற்றப்பட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற தவறான வழிகாட்டுதல் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் மிக மோசமான நடவடிக்கை. ஒரு குடிமகனாக, தேர்தல் ஆணையம் மிக மோசமாக நடந்துகொண்டிருப்பதை சுட்டிக்காட்டுவது எனது உரிமை என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.