மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

மக்களவைத் தேர்தல் பற்றி புது தில்லி முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸில் பயணிகளின் அலசல்.
திருக்குறள் விரைவு ரயில்
திருக்குறள் விரைவு ரயில்Manish Swarup

திருக்குறள் விரைவு ரயில், 2,900 கிலோ மீட்டர் பயணித்து புது தில்லியிலிருந்து கன்னியாகுமரியை அடையும் நாட்டின் மிக நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் ஒன்று. பல கிராமங்கள், நகரங்கள், ஆறுகள், காடுகளைக் கடந்து வருகிறது.

22 பெட்டிகளைக் கொண்ட திருக்குறள் ரயில், இந்தியா எனும் உடலுக்குள், ஒரு சிறிய நுண்ணுயிரிப் போல, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு, பல்வேறு மத, இனங்களைச் சேர்ந்த மக்களை கொண்டு சேர்க்கிறது. பல துயரங்கள், லட்சியங்களோடு, விலை உயர்ந்த காரோ ஏசி பெட்டியிலோ பயணிக்கும் அளவுக்கு வசதியோ இல்லாத மக்களை ஒரே பெட்டியில் ஒரே வேகத்தில் ஏற்றிச் சென்று இறக்குகிறது.

Manish Swarup

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதில் பயணிக்கும் மக்களும் அரசியல், கொள்கை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் வேறுபட்டிருக்கிறார்கள். ஆளும் பாஜக அரசு மீண்டும் வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடியே மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பாரா என்று மக்கள் விவாதிக்கிறார்கள்.

மோடியின் தலைமையின் கீழ் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதுதான், ஆனால் அவரது ஹிந்து-தேசியவாத பிரிவினைவாத கொள்கையை முன்வைக்க அவர் கையாண்ட பலமான ஆயுதங்கள் 140 கோடி மக்கள் தொகையில் - சுமார் 20 கோடி முஸ்லிம்கள், இந்திய நாட்டில் எழுந்திருக்கும் மத பிளவுகளால், மதச்சார்பற்ற ஜனநாயகத்திலிருந்து நாடு, மத எதேச்சதிகாரத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள்.

திருக்குறள் விரைவு ரயில்
விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

அசோசியேட் பிரஸ், அண்மையில், திருக்குறள் ரயிலில் 48 மணி நேரம் பயணித்து, ஜூன் 4ஆம் தேதி வெளியாகவிருக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய வாக்காளர்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள முயன்றுள்ளது. அதில் கிடைத்த சில தகவல்கள்..

திருக்குறள் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட் எடுத்துவிட்டு, வேலை தேடி பல்வேறு நகரங்களுக்கும் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் கிடைத்த இடத்தில் அமர்ந்துகொண்டனர். கிடைத்த இடத்தையே இருக்கையாக மாற்றிக்கொண்டவர்கள் பலர்.

Manish Swarup

உரையாடல் தொடங்கியது... புது தில்லியில் உணவுக் கடை நடத்தும் பிரதீப் குமார், ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எதையும் செய்யவில்லை என்கிறார்.

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில வீழ்ச்சிகளால் சிறு வியாபாரிகள் வீழ்ச்சியடைந்தது குறித்தும் உணவுப்பொருள்களின் விலை உயர்வு குறித்தும் அவர் விவரிக்கிறார்.

அரசிடமிருந்து இலவசமாக கிடைக்கும் 5 கிலோ உணவு தானிய திட்டத்தை வரவேற்கும் பிரதீப், அதனுடன், ஏழ்மையை போக்கவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் திட்டங்கள் தேவை என்கிறார். அதுபோல, மத்திய அரசு கல்வி மேம்பாட்டையும், சிறந்த சுகாதாரத்தையும் வழங்க வேண்டும். எங்களுக்கு இலவசமாக உணவு வேண்டாம், நல்ல கல்வி கிடைத்தால், வேலை கிடைத்தால் அதனைக் கொண்டு நாங்களே எங்களுக்கு உணவு வாங்கிக் கொள்வோம், எங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வோம் என்று தனது குடும்பத்தினரைக் காட்டி பிரதீப் கூறுகிறார்.

Manish Swarup

அதோடு, பாஜகவின் ஆழ்ந்த அரசியலைப்பற்றியும் அவர் பேசுகிறார், கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக இந்து, முஸ்லிம், கோவில், மசூதி என பேசிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இதற்கு எதிராகக் குரல்கொடுத்தால், அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.

இதை ஒரு நொடியும் பொறுத்துக்கொள்ளாமல் ஆட்சேபித்த ரயில் ஓட்டுநராகப் பணியாற்றும் ரிஷிபல், வேலை நிமித்தமாக மதுரை நோக்கிச் செல்வதாகவும், நாட்டை மோடி முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார் என்கிறார். உதாரணமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துவிட்டன, பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அதனால், தனது மகளும் சிறந்த கல்வியை பெற்றதாகக் குறிப்பிடுகிறார்.

ஆரம்பத்திலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும் என்று ரிஷிபல் சொல்ல, அவரைச் சுற்றியிருந்த பல பயணிகளும் அதையே திரும்பச் சொன்னார்கள். இது முன்பதிவில்லாத பெட்டியின் பேச்சு என்றால், படுக்கை வசதிகொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கு அடுத்த செல்கிறோம்.

இந்த ரயில், நாட்டின் இதயம் போன்ற பல நகரங்களை கடக்கிறது, மிக அழகிய தாஜ் மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரை ரயில் கடக்கும் போது, ஒருவர் டீ.. டீ.. என குரல்கொடுத்துக்கொண்டே வருகிறார்.

ஓரளவுக்கு பணம் செலவிட்டு, படுக்கை வசதிகொண்ட பெட்டியில் டிக்கெட் எடுக்க முடிந்த பயணிகள், அனைவரும் பர்த் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் பேச விருப்பமில்லாதவர்கள் மேல் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், கீழே நடக்கும் அரசியல் பேச்சுகளை கவனித்தவாறும், சில சமயங்களில் தங்களை அடக்க முடியாமல், கருத்துகளை தெரிவித்தவாறும் ரயில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Manish Swarup

ஹாஜி அப்துல் சுபான், கையில் நாளிதழை படித்துக்கொண்டே, காலம் ரொம்ப மாறிவிட்டது, பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் ஒன்றாக இருந்தோம். ஆனால், இப்போது அப்படியில்லை என்கிறார் கவலையோடு.

74 வயதாகும் சுபான், முன்னாள் ரயில்வே ஊழியர். இவர் போபால் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் பெரும்பாலான முஸ்லிம்கள் ஒரு அச்ச உணர்வுடனே இருக்கிறார்கள், மத்திய அரசு, முஸ்லிம்களுக்கு எதிராக செய்த சில செயல்களை எடுத்துக் கூறுகிறார், தண்டனை அல்லது அபராதம் என்ற பெயரில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன, சில மாநிலங்களில் இஸ்லாமிய பள்ளிகளும் மூடப்பட்டன், மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

எங்களுக்குப் பிரச்னைகளை எழுப்ப பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களால் நிம்மதியாக பேசக்கூட முடியவிலை என்கிறார் அவர்.

Manish Swarup

அவரது பேச்சை நிறுத்தும் வகையில், மேல் படுக்கையில் அமர்ந்திருந்த சந்தோஷ் குமார் அகர்வால் குறுக்கிட்டுப் பேசினார், இவர் பாகிஸ்தான் ஆள் போல பேசுகிறார் - நமது நாட்டின் 14 சதவீதம் மக்கள் தொகை முஸ்லிம்கள்- மத்திய அரசின் நடவடிக்கையால் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், நீங்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுங்கள் என்கிறார் ஆவேசமாக.

ஒரு இந்துவாக, தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்கும் தான், மோடியின் தலைமையின் கீழ் இந்தியா புதிய உயரங்களை அடைகிறது என்கிறார்.

பிறகு சுபானின் கவலைப் பற்றி என்னதான் சொல்கிறீர்கள்? என்று கேட்டால்,

பாருங்க, முஸ்லிம்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்ளலாம், ஆனால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார் அகர்வால்.

முஸ்லிம்களின் சொத்துகளை நாசம் செய்வது?

அவர்கள் கடந்த ஆட்சியில் பொதுச் சொத்துகளை ஆக்ரமித்தார்கள், இப்போது அழுகிறார்கள் என்றார்.

அடுத்து குளிர் சாதன வசதியுடைய பெட்டியை எட்டிப்பார்த்தோம்.

Manish Swarup

ரயில் தற்போது தெற்குப் பகுதியை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. பெரிய பெரிய நிலப்பரப்புகளில் விவசாயம் நடந்துகொண்டிருக்கிறது. ஆங்காங்கே வீடுகள். மக்கள் விவசாய வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.

வெள்ளையாக துவைக்கப்பட்ட படுக்கை விரிப்புகள் ஒரு பிரவுன் கவரில் வைக்கப்பட்டிருந்தது. சிலர் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். பலரும் அதை எடுக்கவில்லை.

முதல் வகுப்பு ஏசிப் பெட்டியின் இருக்கையில் அமர்ந்திருந்த சுகாதாரத் துறை பெண் அதிகாரி நிகஞ் கார்க், நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை, மாறிவரும் கல்விமுறை குறித்து வருத்தம் தெரிவித்தார். இந்தியர்களின் வாழ்முறை ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், சிறிய விஷயங்கள்தான் மிகவும் முக்கியம் என்கிறார்.

திருக்குறள் விரைவு ரயில்
சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

அருகே அமர்ந்திருந்த சமோத்ரா மீனாவோ, சுத்தமான குடிநீர், வீடுதோறும் எரிவாயு இணைப்பு என மோடி அரசு முழங்குகிறது. ஆனால், எந்த வசதியும் எங்கள் குடும்பத்துக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஆட்சி மாற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்கிறார்.

குடும்பத்துடன் வந்திருந்த மகாதேவ் பிரசாத்தும் இதையே வழிமொழிகிறார், மதுரை சென்றுகொண்டிருக்கும் அவர், கையில் கங்கை நதி நீரை எடுத்துக் கொண்டு மிகவும் புகழ்பெற்ற கோயிலில் அபிஷேகத்துக்குக் கொடுப்பதற்காக செல்கிறார்.

Manish Swarup

ஆனால், மீண்டும் மோடி பிரதமராவார் என்று உறுதியாகச் சொல்லும் மகாதேவ் பிரசாத், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கிறார். நாட்டில் உள்கட்டமைப்புகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு மோடி எடுக்கும் முயற்சிகளையும் அவர் வரவேற்கிறார்.

ஒரு தொழில்முனைவோராக உங்கள் தொழில் முன்னேற்றம் அடைந்ததா?

அனைத்துத் தொழில்துறையும் தொய்வடைந்துவிட்டது. எனது பகுதியில் பல தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், சில முக்கியமான விஷயங்களை மோடி சாதித்துள்ளார்தான் என்கிறார்.

மோடியின் ஆதரவாளர்களைப் போலவே, இவரும், முன்பெல்லாம் இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பே இருக்காது. ஆனால் மோடி ஆட்சியால் வெளிநாட்டில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், இவர் பேசுவதை அருகில் அமர்ந்திருக்கும் வினோத் குமார் ஒப்புக்கொள்ளாதது போல அவர் முகம் காட்டுகிறது. இவர் திருச்சியில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். 32 வயது வினோத், மோடி அரசை கடுமையாக விமர்சிக்கிறார். பிரதமர் மோடியின் ஹிந்துக் கொள்கைகளால்தான் நாட்டில் மொழி, இனம், மதம் ரீதியிலான பிரிவினைவாதங்கள் அதிகரித்திருக்கிறது. ஒருவேளை, மீண்டும் மோடி பிரதமரானால், நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்காது என்கிறார்.

அடுத்தநாளும் ரயில் அதே உற்சாகத்துடன் சென்றுகொண்டிருந்தது. ஆனால் பயணிகள் களைப்படைந்து, பேசுவதை குறைத்து கிசுகிசுக்கத் தொடங்கிவிட்டனர். கடற்கரை நகரமான கன்னியாகுமரி கடலில் கால் வைப்பதற்காக பயணித்துக்கொண்டிருந்த ரயிலிலிருந்து ஏராளமான கூட்டம் இறங்கிக்கொண்டே வந்தது. ஒரு சிலர் மட்டும் ஒரு சில ரயில் நிலையங்களில் ஏறினர்.

கிழக்கிலிருந்து சூரியன் உதித்தது, பலரும் தங்கள் கைகளை ஒன்றாக சேர்த்து நெட்டி முறித்தனர். இறங்குவதற்கு ஆயத்தமாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com