
கடந்த ஏழு நாள்களில், சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பேரை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த குடிகார கொலையாளியை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த 26 வயது கொலையாளிக்கு, கொலை செய்தது தொடர்பான எந்த குற்ற உணர்வும் இல்லை, அவர் எந்த முன்விரோதமும் இன்றி தொடர்ந்து கொலைகளைச் செய்து வந்துள்ளதும், குடிக்கு அடிமையானவர் என்பதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடைபாதையில் உறங்குவோரைக் கொல்லும் கிரிஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தெற்கு பெங்களூருவின் வசந்த்புரா பகுதியைச் சேர்ந்தவர்.
கடந்த 13ஆம் தேதி கேகே சாலை பகுதியில், சாலையோரம் படுத்துறங்கிக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க நபர், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இதுபோல மே 19ஆம் தேதியும் கே.ஆர். சந்தைப் பகுதியில் ஒரு கொலை நடந்திருந்தது.
சம்பவப் பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், கிரிஷ் உருவம் பதிவாகியிருந்தது. இவர் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் என்பதும் தெரிய வந்தது. இவர் மீது பாலியல் வழக்கும், கொள்ளை வழக்கும் உள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
கடந்த 2020ல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு விடுதலையான அவர் பல்வேறு கூலி வேலைகள் செய்து வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
இவரை கைது செய்து விசாரித்ததில், கடந்த இரண்டு கொலைகளை அவர் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி கொலையான நபரின் அடையாளம் இன்னமும் தெரியவரவில்லை. அவரது கையில் ஆங்கிலத்தில் விபி மற்றும் என்டீஆர் என பச்சைக்குத்தப்பட்டுள்ளது. விசாரணையில், இந்த நபர், சிகரெட் தரவில்லை என்று கிரிஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கொலையான முதல் நபர், குடிக்க பணம் தரவில்லை என்பதால் கிரிஷால் கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களைக் கொன்றுவிட்டு செல்போனை திருடிச்சென்று விற்று குடித்துள்ளார் கிரிஷ். கொலையாளியின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.