
தெற்கு, மத்திய கேரளத்தில் செவ்வாய்க்கிழமை காலை பெய்த கனமழையில் தாழ்வானப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
எடப்பள்ளி, காக்கநாடு, இன்ஃபோ பார்க், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையம், கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம், பலரிவட்டம், களூர் ஆலூவா, திரிக்கரா, களமசேரி, திரிபுணித்துறா, ஃபோர்ட் கொச்சி, தொப்பும்பாடி, மட்டான்சேரி, முண்டம்வேளி, மேற்கு கொச்சி ஆகிய பகுதிகளில் கனமழையால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களமசேரியில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 9.10 முதல் 10.10 வரை ஒருமணி நேர இடைவெளியில் 98.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டல ரேடார் ஆராய்ச்சி இயக்குநர் அபிலாஸ் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் லீலாவதி என்பவரின் வீட்டில் 2 அடி அளவுக்கு மழைநீர் புகுந்து, அவரது வீட்டிலிருந்த பல புத்தகங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை ஃபோர்ட் கொச்சியில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து கேஎஸ்ஆர்டிசி பேருந்து மீது விழுந்தது. போலீசார், தீயணைப்பு படையினர் மரத்தை அகற்றி அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.
கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து கொச்சி துறைமுக படகு ஓட்டுநர் வில்பிரட் மானுவல் கூறுகையில், “காலை 8.30 மணியளவில், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற இன்போர்டு என்ஜின் நாட்டுக் கப்பல், ஃபோர்ட் கொச்சிக்கும் கண்ணமாலிக்கும் இடையே உள்ள சவுட் தேவாலயம் அருகே உயரமான அலைகளில் சிக்கி கவிழ்ந்தது. அலையில் சிக்கிய மீனவர்கள் நீந்திப் பாதுகாப்பாக இடங்களுக்குச் சென்றனர். மீனவர்கள் உயிர்காப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்ததால் பலத்த அலைகளிலிருந்து தப்பித்து கரைக்கு நீந்த உதவியது” என்றார்.
கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாலும், மேற்கு திசை காற்று வலுப்பெற்றுள்ளதாலும் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், ஓரிரு நாட்களில் பருவமழை தொடங்குவதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை தொடங்குவதை உறுதிப்படுத்த, மேற்குக் காற்று 600 காற்றழுத்த (ஹெச்பிஏ) ஆழத்தைக் கொண்டிருக்க வேண்டும், வெளிச்செல்லும் நீண்ட தூரக் கதிர்வீச்சு 200 டபிள்யூஎம்-2க்குக் கீழே இருக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 14 நிலையங்களில் 60 சதவீதம் தொடர்ந்து 2 நாட்களுக்கு 2.5 மிமீக்கு மேல் மழையைப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் மினிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடுலு, மங்களூர் ஆகிய நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொச்சியில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மழை பதிவான விவரம்:
களமச்சேரி: 157 மி.மீ
பள்ளுருத்தி: 100 மி.மீ
மட்டாஞ்சேரி: 54 மி.மீ
கீரம்பாறை: 51 மி.மீ
சூண்டி: 58 மி.மீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.