
கடந்த 24 ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் என் மீது பழிசுமத்தி வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த நேர்க்காணல் அளித்துள்ளார்.
அதில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குடனான உறவு, காஷ்மீரில் அதிக வாக்குப்பதிவு, மேற்கு வங்க அரசியல் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்த நேர்க்காணலின் பிரதமர் மோடி கூறியதாவது:
”எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினரை நான் எச்சரிக்க விரும்புகிறேன். அவர்களை இருளில் தள்ளி எதிர்க்கட்சியினர் கொள்ளையடிக்கிறார்கள். வரப்போகும் மிகப்பெரிய நெருக்கடியை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன். வாக்கு அரசியலுக்காக இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உணர்வு மீறப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மக்களின் நலன் விரும்பிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் உண்மையில் அவர்களின் பரம எதிரிகள். அவர்கள் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருக்கிறது. எனது தலித், பழங்குடியினர், ஓபிசி சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக நான் போராடுவேன்.
கடந்த 24 ஆண்டுகளாக என் மீது எதிர்க்கட்சியினர் பழிசுமத்தி வருகிறார்கள். எங்கள் கட்சியினர் கணக்கெடுத்ததில் 101 முறை நாடாளுமன்றத்தில் தவறாக பேசியுள்ளார்கள். தேர்தல் நடைபெறும்போது, மற்ற நாள்களிலும் தவறான கருத்துகளை தெரிவிக்க தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று எதிர்க்கட்சியினர் நம்புகிறார்கள். அவர்கள் விரக்தியடைந்து விட்டனர். அவதூறு கருத்துகள் அவர்களின் இயல்பாகிவிட்டது.
கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட சோதனைகளின் மூலம் ரூ. 34 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2,200 கோடியை நாட்டுக்கு கொண்டு வந்ததை மதிக்கப்பட வேண்டுமே தவிர துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. திருட்டில் பங்கு உள்ளவர்கள் பிடிபட்டவுடன் கத்துவார்கள்.
முதலில், நீதி அமைப்பை வணங்குகிறேன். அரசாங்கம் ஒரு பணியை செய்ய வேண்டுமென்றால், அதற்கான வடிவமைப்பு, உத்தி ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். காஷ்மீர் பகுதிகளில் பிரச்னைகளை தீர்க்க சில சமயங்களில் இணையத்தை முடக்க வேண்டியிருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தடையின்றி இணையசேவை வழங்கப்படுவதாக குழந்தைகள் பெருமையுடன் கூறுகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்து வருகின்றன. மக்கள் வாக்களித்து ஒருவரை வெற்றி பெற வைப்பது மட்டும் அல்ல, அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு முழு உணர்வுடன் அர்ப்பணிப்பதாகும். கடந்த 40 ஆண்டுகால வாக்குப்பதிவு சதவிகிதம் முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்தது திருப்தி அளிக்கிறது.
சட்டப்பிரிவு 370 வெறும் 4 - 5 குடும்பங்களின் செயல்திட்டமாக இருந்தது, அது காஷ்மீர் மக்களின் திட்டமோ அல்லது நாட்டு மக்களின் திட்டமோ அல்ல. அவர்களின் நலனுக்காக 370-ஐ நீக்கினால் சுடுகாடாகும் எனக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒற்றுமை உணர்வு அதிகமாகி இருக்கிறது. இது தேர்தல், சுற்றுலா உள்ளிட்டவற்றில் வெளிப்படுகிறது.
ஒடிஸாவின் தலைவிதி மாறப் போகிறது. அரசு மாறவுள்ளது. முன்னதே கூறியபடி, ஜூன் 10-ஆம் தேதி பாஜக முதல்வர் பதவியேற்பார். கடந்த 25 ஆண்டுகளாக ஒடிஸாவில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. ஒடிஸாவில் வளங்கள் இருந்தும் மக்கள் ஏழையாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நல்ல உறவு உள்ளது. ஜனநாயகத்தில் பகை கிடையாது. தற்போது உறவு பேண வேண்டுமா அல்லது ஒடிஸாவின் தலைவிதியை பற்றி கவலைப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஒடிஸாவின் பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுத்துள்ளேன், அதற்கான உறவை தியாகம் செய்ய வேண்டுமானால் செய்வேன். தேர்தலுக்கு பிறகு யாருடனும் விரோதம் இல்லை என்பதை புரிய வைப்பேன்.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸ் தனது இருப்புக்காக போராடி வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 3 உறுப்பினர்களை கொண்டிருந்தோம், தற்போது 80 இடங்களை பிடித்துள்ளோம். கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்தோம், இம்முறை இந்தியாவில் மிகச் சிறப்பான செயல்பாடு உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும். அதிகபட்ச வெற்றியை பெறும். திரிணமூல் அரசு விரக்தியடைந்துள்ளது. தேர்தலுக்கு முன் பாஜகவினர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், இத்தனை அட்டூழியங்களையும் மீறி மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2010க்குப் பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய மோடி, “ஒரே இரவில் முஸ்லிம்களுக்கு ஓபிசி சான்றிதழ்கள் வழங்கி ஓபிசி பிரிவினரின் உரிமைகளை பறித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இந்த மோடி தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது நீதித்துறையையே அவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.