
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் தியானத்திற்கு எதிர்க்கட்சிகள் இடையூறு செய்யக் கூடாது என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்து பாரம்பரியத்தை காங்கிரஸ் எப்போதும் கேள்விக்குள்ளாக்குகிறது. எதிர்க்கட்சிகளுக்கு தியானம் செய்யத் தெரியாவிட்டாலும் பிறருடைய தியானத்தைத் தொந்தரவு செய்ய முயற்சிக்கக் கூடாது. மோடியின் சுனாமி நடந்து வரும் தேர்தலில் காங்கிரஸை அழித்துவிடும்.
தோல்வியை சந்திக்கும் காங்கிரஸ் பின்னர் வழக்கம் போல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களை குறை கூறுவார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 45 மணி நேர தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
சனிக்கிழமை மாலை வரை இந்த தியானம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேராக அவர் குமரி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.