மோடி - அமித் ஷா - ஆதித்யநாத் 'மோதல்'! உ.பி. தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

பிரதமர் மோடி- அமித் ஷா மற்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இடையேயான இருப்பதாகக் கூறப்படும் மோதல், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?
ஆளுக்கொரு பக்கம்! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் மோடியுடன் ஆதித்யநாத், அமித் ஷா! (கோப்பிலிருந்து).
ஆளுக்கொரு பக்கம்! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் மோடியுடன் ஆதித்யநாத், அமித் ஷா! (கோப்பிலிருந்து).பி.டி.ஐ.
Published on
Updated on
3 min read

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடருவாரா? அல்லது அவரது பதவி பறிக்கப்படுமா? என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளால் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தேர்தலில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றால், உத்தரப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து யோகி ஆதித்யநாத் மாற்றப்படுவாரோ என்ற கேள்வி மாநில பாஜகவினரிடையே பரவலாகப் பேசப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலிருந்து தற்போதைய தேர்தல், முற்றிலும் மாறுபாடு நிறைந்ததாக அமைந்துள்ளது. கடந்த தேர்தலில் வாக்காளர்களிடையே ஹிந்துத்துவ உணர்வுடன் தேசியவாதமும் முன்னிறுத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என சாமானிய மக்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்னைகளே முன்னிலை பெற்றுள்ளன. இந்தப் பிரச்னைகள் இந்த தேர்தலில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன என்பதற்கான விடை ஜூன் 4 ஆம் தேதி தெரிய வரும்.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசம், வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் முக்கிய தேர்தல் களமாக விளங்குகிறது. பிரதமர் மோடி - அமித் ஷா ஆகிய இரு தலைவர்களால், 2014-க்கு பின் பெரும் எழுச்சியை பெற்றுள்ள பாஜக, உத்தரப் பிரதேசத்தில் அனைத்து சமூகப் பிரிவினர் மத்தியிலும் ஆழமாக வேரூன்றி உள்ளது.

2017 இல் முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், அதனைத் தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று, 7 ஆண்டுகளாக அங்கு முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். மேலும், தன்னைத் தனிப்பெரும் தலைவராகவும் முன்னிறுத்திக் கொண்டுள்ளார் யோகி ஆதித்யநாத்.

இதற்கான அடித்தளத்தை உ.பி. முதல்வராக பதவியேற்ற நாள் முதலே எடுக்கத் தொடங்கிவிட்டார் அவர். யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் தங்கள் ‘பாபாவை’ (யோகியை அவ்வாறுதான் அழைக்கின்றனர்) பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் அவரை வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கேஜரிவால் போன்றோரும் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரங்களில் பம்பரமாக சுழன்று உழைத்து வரும் யோகி, கடந்த 2 மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டு வாக்காளர்களைக் கவர்ந்திருக்கிறார்.

தனது பிரசாங்களில் எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசினாலும், ’ஹிந்துத்துவ’ கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் அவர் தவறுவதில்லை. எதிர்க்கட்சிகளைக் ’கடவுள் ராமரின் விரோதிகள்’ என விமர்சிப்பதன் மூலம் பாஜக ஆதரவு வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். ’ராம பக்தர் ஒருவரே, தில்லியில் ஆட்சியமைப்பார்’ என்ற முழக்கத்தையும் வாக்காளர்களிடையே கொண்டு சேர்த்துள்ளார்.

தான் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னரே, உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், கொள்ளை கும்பல், மாஃபியாக்களுக்கு முடிவுரை எழுதப்பட்டுளதாகவும், தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதகவும் உரக்கப் பேசி வருகிறார் அவர்.

எனினும், மாநிலத்தில் சிறுபான்மையினர் மீது காவல்துறை அடக்குமுறைகளைக் கையாண்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, யோகி ஆதித்யநாத்துக்கும் அமித் ஷாவுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி, தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் களமாடவும் தவறவில்லை.

இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பாஜகவில் மாநில முதல்வர்கள் ஒவ்வொருவராக மாற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக வேறொரு தலைவரை மாநிலங்களில் முதல்வராகப் பதவியில் அமர்த்துவதைப் போல, இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றிபெற்றால், யோகி ஆதித்யநாத்துக்கும் அதே நிலைமைதான் ஏற்படும் என்று பேசியுள்ளார். அவருடைய இந்த கூற்று, யோகிக்கு விடுக்கப்பட்ட சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக தலைவர்கள் இதை நிராகரித்துப் பேசி வரும் சூழலில்,தொண்டர்கள் மத்தியில் கேஜரிவாலின் பேச்சு சலசலப்பை அல்லது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுக்கொரு பக்கம்! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் மோடியுடன் ஆதித்யநாத், அமித் ஷா! (கோப்பிலிருந்து).
தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

’ராஜ்புத்’ சமூகத்தை சேர்ந்தவரான யோகி ஆதித்யநாத்தின் ராஜ்புத் சமூகத்தினர், பாஜகவின் மேலிட நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதே சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான ராஜா பையா, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். இவர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக நெருக்கமானவரும்கூட.

இதனிடையே, தேர்தல் பிரசாரங்களுக்கிடையே, ராஜா பையாவை சந்தித்து அவரது ஆதரவை கோரியுள்ளார் அமித் ஷா. ஆனால், அமித் ஷாவின் இந்த சந்திப்பால் பலன் ஏதும் கிட்டவில்லை பாஜகவுக்கு.

மேலும், ராஜா பையாவின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்று வருவதும் பாஜக தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவிதத்தில் ’மோடி-ஷா’ இரட்டைத் தலைவர்களுக்கு ’யோகி-பையா’ இணை ஒரு போட்டியாக உருவெடுத்து நிற்பதாக இங்கே பார்க்கப்படுகிறது.

உயர்சாதி ஹிந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் இயங்கி வரும் அவரது ’கோரக்நாத் ஆன்மிக மடம்’ அக்கறை கொள்வதில்லை.

கடந்த சில ஆண்டுகளில் தனது மடத்தை விரிவுபடுத்தியிருப்பதுடன், உயர்சாதி ஹிந்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மறைமுகமாக செயல்படுத்தி வருகிறார் யோகி என்றோர் குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதன் மூலம், தில்லிக்கு செல்வதற்கான அரசியல் பாதையை வலுப்படுத்த முடியுமென்பது யோகியிடன் திட்டமாக் இருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.

ஆளுக்கொரு பக்கம்! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் மோடியுடன் ஆதித்யநாத், அமித் ஷா! (கோப்பிலிருந்து).
ராம பக்தர்தான் பிரதமராக முடியும்: யோகி ஆதித்யநாத்

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தன்னுடன் யோகி ஆதித்யநாத்தையும் உடன் அழைத்துச் சென்று, கட்சிக்குள் இணக்கமான சூழலே நிலவுவதாக வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதையே, தனது தேர்தல் பிரசாரங்களில் பேசும்போது, ‘மீண்டும் மோடி ஆட்சி’ என்ற முழக்கத்தை உரக்கக் கூறி வாக்கு சேகரிக்கவும் யோகி ஆதித்யநாத் தவறவில்லை. இவ்விரு தலைவர்களும் அரசியல் கள நிலவரத்தை நன்கு புரிந்து வைத்துள்ளதற்கு இவையே சாட்சி.

இந்த நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகளைப் பொருத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

யோகி ஆதித்யநாத்தின் ஆன்மிக மடம் அமைந்துள்ள கோரக்பூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன்1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்த் முறை எத்தனை இடங்களில் பாஜக வெல்லும் என்பதைப் பொருத்தே, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பலம் என்ன என்பது தெரிய வரும், யோகி ஆதித்யநாத்தின் தலைவிதியை மாற்றக்கூடிய தேர்தலாகக்கூட இந்தத் தேர்தல் அமையலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com