
வெனிசுவேலா நாட்டில் நடக்கவுள்ள பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சிவதாசனுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
வெனிசுவேலா தலைநகர் கரகாஸில் வருகிற நவம்பர் 4, 5 தேதிகளில் பாசிசத்திற்கு எதிரான உலக நாடாளுமன்ற மன்ற மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 300 எம்.பி.க்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. சிவதாசனுக்கு வெனிசுவேலா அரசாங்கம் அழைப்பு விடுத்தது.
மேலும், கடந்த மாதம் இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வெனிசுவேலா துணை குடியரசுத் தலைவர் பெட்ரோ இன்பேன்ட் அனுப்பிய அழைப்புக் கடிதத்தில், எம்.பி. சிவதாசன் பயணத்துக்கு ஏற்பாடு செய்த இந்திய அரசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் அனுமதிக்குப் பிறகு, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த போதிலும், மாநாட்டில் கலந்துகொள்ள எம்.பி.க்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.பி. சிவதாசன், அரசியல் காரணங்களுக்காக தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக?
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'இந்தியாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தபோதிலும் பாசிசத்திற்கு எதிரான வெனிசுவேலா மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுத்தது அதிர்ச்சியளிக்கிறது. இது உரிமைகள் மீதான தாக்குதல்.
உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகளின் வளர்ச்சி, சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பல நாடுகளும் அங்குள்ள கட்சிகளும் இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்துள்ளன. தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையில் முக்கியமான அச்சுறுத்தல்களில் ஒன்றான பாசிசத்துக்கு எதிரான முக்கியமான மாநாடு இது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் விதத்தில் இதில் நானும் இணைய விரும்பினேன். பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த காரணமுமின்றி எனக்கு அனுமதி மறுத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.