பயங்கரவாதிகளைக் கொல்லக்கூடாது! - ஃபரூக் அப்துல்லாவின் கருத்தால் சர்ச்சை!

பயங்கரவாதிகளை கொல்லக்கூடாது, அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

பயங்கரவாதிகளை கொல்லக்கூடாது, அவர்களை உயிருடன் பிடித்து விசாரிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுடுவதற்குப் பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும்.

பிடிபட்ட பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிடும் பயங்கரவாதக் குழுக்களைக் கண்டறியலாம். அவர்களின் நெட்ஒர்க் குறித்த தகவல்கள் கிடைக்கும்' என்றார்.

மேலும், 'ஜம்மு - காஷ்மீர் பட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும், ஜம்மு-காஷ்மீரில் அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் இருக்கிறது.

இந்த தாக்குதலை யார் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் பிடிபட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடாது. அவர்களைப் பிடித்து, அவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அரசை சீர்குலைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும்' என்றார்.

ஃபரூக் அப்துல்லாவின் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, 'பயங்கரவாதத்திற்கு காரணம் பாகிஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் விசாரிக்க என்ன இருக்கிறது? பாகிஸ்தானும் பயங்கரவாதக் குழுக்களும்தான் இதன் பின்னணியில் இருக்கின்றன. இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். மனிதாபிமானத்துக்கு எதிரானவர்களுடன் ஒன்றிணைந்து போரிடுவோம்' என்று கூறியுள்ளார்.

அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதுகுறித்து கூறுகையில், 'ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிகப்பெரும் ஆளுமை ஃபரூக் அப்துல்லா. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக தனது வாழ்நாளை செலவிட்டவர். அவருடைய நேர்மை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட தலைவர் ஏதாவது சொல்கிறார் என்றால் மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகம், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்று முயற்சி செய்ய வேண்டும்' என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ஒரு மாதத்தில் 5 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. திடீரென பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தது ஏன்? என தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. ஆகா சையத் ருஹுல்லா மெஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிலர் மக்களோடு மக்களாக இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுவதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் என்றும் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா கூறியுள்ளார்.

மேலும் ஒமர் அப்துல்லாவின் ஆட்சியைக் கலைக்க எந்த ஏஜென்சியும் செயல்படவில்லை என்றும் தற்போது அமைதி நிலவும் ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லா இதுபோன்று கருத்துகளை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com