இளைஞர்களிடையே அதிகரிக்கும் பக்கவாதம்! தடுப்பது எப்படி?

பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
file
file
Published on
Updated on
2 min read

சமீபமாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பது எப்படி? பக்கவாதம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து ஹெல்த்கேர் அட் ஹோம் என்ற மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர் கௌரவ் துகல் விளக்குகிறார்.

நாட்டில் பக்கவாதத்தால் மாதத்திற்கு 87,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூளைக்குச் செல்லும் ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் செல்வது தடைபட்டாலோ ரத்தநாளத்தில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது.

முதலில் முகத்தில் உள்ள தசைகள் பாதிப்படைந்து ஒரு பக்கம் செயலிழக்கும். சிலருக்கு ஒரு பக்கம் காதில் வலி ஏற்படலாம். அடுத்து ஒரு பக்கம் கை அல்லது கால் பலவீனமாகும், அடுத்து பேசுவதில் சிரமம், பார்வைக் குறைபாடு ஏற்படும். பின்னர் நீங்கள் நடக்க, உணர்வுகளைக் கட்டுபடுத்த என மூளையுடன் தொடர்புடைய அனைத்து தன்னிச்சையான செயல்களும் பாதிக்கப்படும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

காரணங்கள்

புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பக்கவாதம் ஏற்படலாம்.

இவற்றில் உயர் ரத்த அழுத்தம் ஒரு மோசமான காரணி. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம் மூளையில் ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், இதனால் பக்கவாதம் ஏற்படும். ரத்தநாளத்தில் கொழுப்புகள் சேர்வதால் ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே பக்கவாதம் ஏற்படுவதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தமாகும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கல்வியில் சிறந்து இருக்க வேண்டும் என்ற மன அழுத்தமும் அவர்களிடையே அதிகம் இருக்கிறது. சிலருக்கு பிறப்பிலேயே பிரச்னைகள் இருக்கலாம். தற்போதைய பக்கவாத நோயாளிகளில் 20% பேர் இளைஞர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

சீரான சத்தான உணவைச் சாப்பிடுவது அவசியம், உடற்பயிற்சி செய்ய வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

புகைபிடித்தல், மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

எந்தவொரு உடல்ரீதியான பிரச்னையையும் ஆரம்பத்திலேயே கண்டறிய வழக்கமான பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

பக்கவாதம் ஏற்படுத்தவதற்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது பக்கவாதம் ஏற்பட்டாலோ உடனடியாக விரைந்து மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

பக்கவாத அறிகுறிகள் தொடங்கி 7 முதல் 21 நாள்களுக்குள் மருத்துவமனை சென்றால், 60 நாட்களில் குணமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. தாமதிக்கும்பட்சத்தில் பாதிப்பு அதிகரிக்கும். ரத்தம் இல்லாவிட்டால் இறக்கும் ஒரே உறுப்பு மூளை.

பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அதில் இருந்து மீளலாம் என்கிறார் டாக்டர் கௌரவ்.

மேலும், பக்கவாதம் யாருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம், பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஆனால், ஆண்களைவிட பெண்கள் அதிகம் இதனால் இறக்கின்றனர், ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால் மீண்டும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம், குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் இருந்தால் சந்ததியினருக்கு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com