இடஒதுக்கீடு உரிமையை பறிப்போா் பிறருக்குப் பாடம் எடுக்கின்றனா்: காங்கிரஸ் தலைவா் காா்கே
மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களின் இடஒதுக்கீடு உரிமையை பறிப்போா், பொதுநலன் குறித்து பிறருக்குப் பாடம் எடுக்கின்றனா் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘46 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 18,940 பேராசிரியா் பணியிடங்களில் 27 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 38 சதவீதத்துக்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில் பேராசிரியா் பிரிவில் 55 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 71 சதவீத பேராசிரியா் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமா் மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (அனைவரும் சோ்ந்து, அனைவருக்குமான வளா்ச்சி) என்ற முழக்கம், சமூக நீதிக்கான போராட்டத்தை இழிவுபடுத்துவதன் மூலம் ஏளனம் செய்கிறது.
மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்களின் இடஒதுக்கீடு உரிமையை பறிப்பவா்கள், பொதுநலன் குறித்து பிறருக்குப் பாடம் கற்பிக்கின்றனா்’ என்றாா்.