
மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு அருகே காட்டு யானைகளால் 2 பேர் கொல்லப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தில், சனிக்கிழமையில் (நவ. 2) இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ராம்ரதன் யாதவ் (50) என்பவரும், பிராஹே கிராமத்தில் பைரவ் கோல் (35) என்பவரையும் காட்டு யானைகள் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, பாங்கா பகுதியில் மாலூ சாஹுவை (32) யானை தாக்கியதில் காயமடைந்தார்.
இதனையடுத்து, தகவலறிந்த வன அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். இதுகுறித்து, உமரியா பிரதேச வன அதிகாரி விவேக் சிங் கூறியதாவது உணவுதேடி வந்த காட்டுயானைகளால் தாக்கப்பட்டிருக்கலாம். 2 நாள்களுக்கு முன்பாக உணவுதேடி வந்த 25 காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டன.
அந்த கூட்டத்திலிருந்து பிரிந்த யானைகளாகக்கூட இருக்கலாம். இருப்பினும், அனைத்து யானைக் கூட்டத்தையும் கண்காணிப்புக் குழு கண்காணித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
பந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 3 நாள்களில் 10 யானைகள் இறந்துள்ளன. அக். 29-ல் 4 யானைகளும், அக். 30-ல் 4 யானைகளும், அக். 31-ல் 2 யானைகளும் இறந்துள்ளன. அவற்றின் உடற்கூறாய்வு பரிசோதனையில், அவைகளின் வயிற்றில் இருந்த உணவில் நச்சு கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய வனத்துறை இணை அமைச்சர் திலீப் அஹிர்வார், கூடுதல் தலைமைச் செயலாளர் (வனத்துறை) அசோக் பர்ன்வால், மாநில வனத்துறைத் தலைவர் அசீம் ஸ்ரீவஸ்தவா ஆகியோரை உமரியா மாவட்டத்திற்குச் சென்று யானைகளால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.