ஜம்மு - காஷ்மீரின் முதல் பேரவைத் தலைவர் அப்துல் ரஹீம்!

ஜம்மு - காஷ்மீர் பிரதேசத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்துல் ரஹீம் ராதர்
அப்துல் ரஹீம் ராதர்ANi
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் பிரதேசத்தின் முதல் சட்டப்பேரவைத் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீர் பிரதேச சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, பேரவைத் தலைவர் பதவிக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம் பெயரை விவசாயத் துறை அமைச்சர் ஜாவத் அஹ்மத் தார் முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் உமர் அப்துல்லாவும் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவும் அவரை அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “ஒட்டுமொத்த பேரவையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு நீங்கள் இயற்கையான தேர்வாக இருந்தீர்கள். நீங்கள் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒருவர்கூட ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இப்போது இந்த பேரவையின் பாதுகாவலராக நீங்கள் மாறிவிட்டீர்கள்” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் தலைவராக அப்துல் ரஹீம் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், 2002 முதல் 2008 வரை சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இதில், தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று யூனியன் பிரதேசத்தின் முதல் அரசை அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com