மகாராஷ்டிர டிஜிபி இடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு
மகாராஷ்டிர மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி) ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், காவல்துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி) ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளிடம் இருந்து எழுந்த புகாா்களைத் தொடா்ந்து இந்த உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்.12-ஆம் தேதி மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். இதுபோன்ற அரசியல் குற்றங்கள் மாநிலத்தில் அதிகரித்து வருவது குறித்து அண்மையில் தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கவலை தெரிவித்திருந்தாா்.
இதனிடையே, மாநிலத்தில் ஆளும் சிவசேனை (ஷிண்டே பிரிவு)-பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு காவல்துறை தலைமை இயக்குநா் ரஷ்மி சுக்லா ஆதரவாக இருப்பதாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்)-சிவசேனை (உத்தவ் பிரிவு) அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தலை உறுதி செய்யும் நோக்கில், பேரவைத் தோ்தலுக்கு முன்னா் ரஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டி.ஜி.பி பதவியை அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்குமாறும், அதுவரை மும்பை காவல்துறை ஆணையா் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி பதவியை வகிக்கும்படியும் மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை சரத் பவாா், உத்தவ் தாக்கரே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் ஆகியோா் வரவேற்றுள்ளனா். 288 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...