ரூ. 6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடமே உள்ளன: ரிசர்வ் வங்கி!

2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாடு நிறுத்தப்பட்டப் பிறகு இதுவரை 98.04 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாடு நிறுத்தப்பட்டப் பிறகு இதுவரை 98.04 சதவீத நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டதாகவும், ரூ. 6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் மக்களிடமே உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் அக். 7, 2023 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி அளவிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வராமல் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

’இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பிப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் ரூ. 2,000 நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. 

நேரில் செல்ல முடியாதவர்கள் தபால் மூலமாக 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ரூ. 2,000 நோட்டுகளை அனுப்பலாம். அனுப்பிய நோட்டுகளுக்கு சமமான தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அகமதாபாத், பெங்களூரு, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டீகர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 19 இடங்களில் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிதாக ரூ. 500 மற்றும் ரூ. 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com