
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை காலை சென்றார்.
லக்னெள விமான நிலையத்துக்கு இன்று காலை வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு அளித்தனர்.
சாலை மார்க்கமாக ரேபரேலி சென்ற ராகுல் காந்தி, ஸ்ரீ பிபாலேஷ்வர் மகாதேவ்ஜி கோயிலில் தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ரேபரேலியில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், புதிய கட்டடங்களை ராகுல் காந்தி திறந்து வைக்கிறார்.
மேலும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி, இன்று மாலை ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
ராகுல் காந்தியின் வருகை குறித்து காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறியதாவது:
“பல்வேறு பணிகளுக்கு மத்தியில் ரேபரேலி எம்பியாக தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்பியாக தலைமை ஏற்று நடத்தவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை ஹைதராபாத் செல்லும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் நடைபெறவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வல்லுநர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.