
புது தில்லி: வெளிநாடுகளில், காளிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்ட திட்டங்களை வகுக்குமாறு மத்திய அரசு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக ஒரு ரகசிய மெமோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மத்திய வெளியுறவு விவகாரத் துறை மூலம், பல்வேறு இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த மெமோ, காளிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான திட்டங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நாட்டின் மிகப்பெரிய கொடைவள்ளல் யார்? அம்பானியோ அதானியோ அல்ல!
அந்த ரகசிய மெமோவில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காளிஸ்தானியர்கள் தற்போது தீவிர செயல்பாட்டில் உள்ளனர். வட அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் சீக்கியர்கள் வாழ்கிறார்கள். காளிஸ்தான் பிரிவினைவாதிகளால் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் முழக்கங்கள், நாட்டுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல காளிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை உருவாக்கி அதனை காளிஸ்தான் கொள்கைகளாக அறிவித்து வருகின்றன.
ஆனால், வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றிருக்கும் பல அமைப்புகளை, சீக்கிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாக்க முடியும். அதுபோல, நடுநிலையாக வாழும் சீக்கிய சமூகத்தை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமாக, மிதவாத சீக்கியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களது மிதவாத சக்தியை மட்டுப்படுத்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
முதலில், இந்த ரகசிய மெமோ உண்மையானதா என்பது கேள்விக்குரியது. இந்த நிலையில்தான், இந்த ரகசிய மெமோ உண்மையல்ல என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஆனால், இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானதாக வெளியாகியிருக்கும் இந்த மெமோ, கடந்த ஆண்டே சமூக வலைதளங்களில் இதே வேகத்தில் பரவி, அதே வேகத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் போலியானது என்று விளக்கமும் கொடுத்துள்ளது.
இந்த ரகசிய மெமோ போலியானது, வேண்டுமென்றே தவறுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்த ரகசிய மெமோவும் அனுப்பப்படவில்லை என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கடந்த ஆண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால், மீண்டும் இந்த ஆண்டு தி ஸ்டார் பேனர் என்ற முகவரியில் அமன் சிங் என்பவர் இந்த ரகசிய மெமோவை மீண்டும் தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட, அது வைரலாகி, விளக்கத்தையும் பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்தியா - கனடா இடையே தற்போது தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறை மூலம் இதுபோன்ற பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படலாம் என்றும் மத்திய அரசு சந்தேகம் கொள்கிறது.
தங்களது நிலைத்தன்மையற்ற நாட்டின் நலனுக்காக இதுபோன்ற போலியான செய்திகளை சிலர் பரப்பலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் நடந்த நிஜ்ஜார் கொலையில், இந்திய அதிகாரிகளின் பங்கு இருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்று இந்தியா மறுத்திருந்தது.
இந்த நிலையில்தான், வெளிநாடுகளில் காளிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முயற்சிக்குமாறு மத்திய அரசு அனுப்பியதாக ரகசிய மெமோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.