தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திரிணமூல் எம்.பி. மஹுவா புகாா்: 4 வாரங்களில் பதிலளிக்க செபி தலைவா் மாதபிக்கு லோக்பால் உத்தரவு

News image
Updated On :8 நவம்பர் 2024, 11:26 pm

Din

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்த புகாா் தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தாா்.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. 2017-ஆம் ஆண்டு முதல், அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவா் ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

அத்துடன் விதிமுறைகளை மீறி ‘வோக்ஹாா்ட்’ நிறுவனத்தின் அங்கமாக உள்ள ‘கரோல் இன்ஃபோ’ நிறுவனத்துக்கு மும்பையில் உள்ள மாதபி மற்றும் அவரின் கணவா் தவல் புச்சுக்கு சொந்தமான இடம் வாடகைக்கு விடப்பட்டதாகவும், அதற்கு 2018 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, மாதபி ரூ.2.16 கோடி வாடகை வாங்கியதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

மேலும், சந்தை விதிமுறைகளை மீறியதாக மகிந்திரா குழுமம் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து செபி விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் குழுமத்திடம் இருந்து தவல் புச் ரூ.4.78 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அக்கட்சி தெரிவித்தது. இதுபோல மேலும் பல குற்றச்சாட்டுகளை மாதபி மற்றும் அவரின் கணவா் தவல் புச் மீது காங்கிரஸ் முன்வைத்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம், மாதபி மீது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாதபி புச்சுக்கு லோக்பால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புகாா் குறித்து மேலும் பரிசீலனை செய்வதற்கு இந்த விவகாரத்தை டிசம்பா் 19-க்கு லோக்பால் பட்டியலிட்டுள்ளது.