
தென்கிழக்கு தில்லியில் வேலைக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்காத தாயை மகன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோலர்பந்த் கிராமத்தில் உள்ள பதர்பூர் பகுதியில் கிருஷ்ண காந்த் (31), அவரின் தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி மாலை கிருஷ்ண காந்த் வேலைக்காகத் தான் கனடா சென்று குடிபெயரவுள்ளதாக தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் முதலில் திருமணம் செய்துகொள்ளுமாறும், வெளிநாடு பின்பு செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
ஒருகட்டத்தில் கோபத்தில் தான் ஏற்கனவே வாங்கிவைத்திருந்த கத்தியை எடுத்து தாயை சரமாரியாக வெடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தார். பின்னர் தனது தந்தை சுஜித் சிங்கிற்கு தொலைபேசியில் அழைத்து உடனே வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த தந்தையிடம் தன்னை மன்னிக்கவும், முதல் தளத்திற்கு சென்று நீங்களே பாருங்கள் என்று சொல்லிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றார் கிருஷ்ண காந்த்.
முதல் தளத்திற்குச் சென்றபோது ரத்த வெள்ளத்திலிருந்த மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். ஆனால் மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில்,
சுஜித் சிங்குக்கு இரண்டு மகன்கள். இவரது இளைய மகன் சாஹில் போலி (27), வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ண காந்த் வேலையில்லாமல் போதைக்கு அடிமையானவர்.
இரு மகன்களும் திருமணமாகாதவர்கள், சம்பவத்தின் போது தாய் கீதா மற்றும் கிருஷ்ண காந்த் மட்டும் வீட்டிலிருந்தனர். வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் தாயை வெட்டிக் கொன்றுள்ளார் கிருஷ்ண காந்த்.
பின்னர் அதே பகுதியிலிருந்து கிருஷ்ண காந்த் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.