ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்: பிரதமர் மோடி

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி,தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையாக இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றார் மோடி.
ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ
Published on
Updated on
2 min read

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் பாதுகாப்பாக இருப்போம் என ஓபிசி பிரிவினரை எச்சரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 10) தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையாக இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

''நாட்டின் உயர்ந்த மாநிலங்களில் ஒன்றாக ஜார்க்கண்ட்டை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். ஹரியாணாவில் புதிதாக அமைந்துள்ள பாஜக ஆட்சியில் பரிந்துரை கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதேபோன்று ஜார்க்கண்ட் மாநில இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிவது அடிக்கடி நடக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவர்.

ஒற்றுமை அவசியம்

சட்டப்பிரிவு 320 என்ற சுவரை உடைத்து சட்டமேதை அம்பேத்கரின் அரசியலமைப்பை ஜம்மு - காஷ்மீரில் நிறுவியது பாஜக அரசு. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் அம்பேத்கரின் அரசிலமைப்பின்படி பொறுப்பேற்றுள்ளார். இது அம்பேத்கருக்கு மோடி செலுத்தும் மரியாதை.

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து தேவை என்ற முன்மொழிவை காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளது. இதற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியும் ஆதரவளிக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பை முறியடித்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதற்காக காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறது காங்கிரஸ். ஆனால், தலித்துகளும், ஓபிசி பிரிவினரும் ஒன்றிணைந்து இடஒதுக்கீடு பெற்றதில் இருந்து, காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தில் 250 இடங்களுக்கு மேல் கிடைத்ததில்லை. தலித் மற்றும் ஓபிசி பிரிவினரிடையே விரிசலை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

ஊழலை ஒழிப்போம்

போகரா பகுதியில் யாதவ், குர்மி, மலி, லோஹர், பன்சரி என 125 ஓபிசி பிரிவினர் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக மாற்ற வேண்டும் என காங்கிரஸும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் விரும்புகிறது.

ஓபிசி பிரிவினரில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் எதிராக மாற வேண்டும் என்பதே காங்கிரஸ் நோக்கம். மாநிலத்தில் 125 பிரிவினரையும் உடைத்து உங்கள் குரலை பல்வீனப்படுத்த நினைக்கின்றனர். அதனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்.

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், ஊழல்வாதிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவதை உறுதி செய்வோம். ஜார்கண்ட் மாநிலத்தை பாஜக உருவாக்கியுள்ளது. நாங்கள் மட்டுமே அதை வளமாக்குவோம்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மாணவர்களுக்கு ரூ.10,000 மாதாந்திர உதவித் தொகை! -பாஜக தேர்தல் அறிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com