
ஜார்க்கண்ட் முதல்வர் பதவியிலிருந்து சம்பயி சோரன் நீக்கப்பட்டது அவருக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பழங்குடியினத்தவருக்கே நேர்ந்த அவமானம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
தற்போதைய முதல்வராக உள்ள ஹேமந்த் சோரன், சிறையில் இருந்தபோது மாநில முதல்வர் பொறுப்பை அப்போதைய அக்கட்சியின் அமைச்சர் சம்பயி சோரன் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்ததும், சம்பயி சோரனுக்கு பதிலாக மீண்டும் ஹேமந்த் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தற்போது சம்பயி சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவையொட்டி இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் சரிகேலா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்ட பிரசாரத்தில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது சம்பயி சோரனைக் குறிப்பிட்டு அமித் ஷா பேசியதாவது,
''சம்பயி சோரன் பல ஆண்டுகளாக நேர்மையாக இருந்தவர். ஹேமந்த் சோரனுக்கு உண்மையாக செயல்பட்டவர். ஆனால், அவர் முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது அவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பழங்குடி மக்களுக்கான அவமானம். ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதே சம்பயி சோரன் நோக்கம். ஆனால் ஜே.எம்.எம். கட்சி அதற்கு ஆர்வமாக இல்லை.
ஆலம்கீர் ஆலம் இல்லத்தில் இருந்து ரூ.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது யாருடைய பணம்? இந்தப் பணம் மக்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியது. இதனை ஹேமந்த் சோரன் அரசு விழுங்கியது.
பாஜக ஆட்சி அமைத்தால், மாநில மக்களுக்கு சொந்தமான பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர். நிலமுறைகேடு, கனிம வள முறைகேடு, மதுபான ஊழல் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது மாநில அரசு.
ஹேமந்த் சோரன் ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. கேள்வித் தாள்கள் கசிகின்றன. பாஜக ஆட்சி அமைத்தால் இத்தகைய ஊழல் செய்பவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவோம்.
மகாராஷ்டிரத்தில் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் இதனைச் செய்தால், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அவர்கள் கை வைப்பார்கள்.
ஊடுருபவர்கள் அதிகரிப்பதால் மாநிலத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக ஆட்சி அமைந்தால், ஊடுருவல்காரர்கள் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என உறுதி அளிக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மாணவர் நேரடி சேர்க்கை முறையை ரத்து செய்த கனடா! 90% இந்திய மாணவர்கள் பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.