3.5 ஏக்கரில் கஞ்சா சாகுபடி... ட்ரோன் மூலம் கண்டுபிடித்த போலீஸார்!

ஆந்திரப் பிரதேசத்தின் தெகலராயி கிராமத்தில் 3.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
தெகலராயி கிராமத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட நிலம்
தெகலராயி கிராமத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட நிலம்
Published on
Updated on
1 min read

ஆந்திர பிரதேசத்தில் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் 3.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டதை ட்ரோன் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் தெகலராயி என்கிற மலைப் பகுதியிலுள்ள குக் கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க டிரோன் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியிலுள்ள பழங்குடியினரால் மறைவான வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக 19 பேர் பிடிபட்டுள்ளனர். கஞ்சா சாகுபடியை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள பல பகுதிகளில் இவ்வாறு சாகுபடி செய்வதாகக் கூறப்படுகிறது.

அல்லூரி சீதாராம ராஜு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தார் செய்தியாளர்களுடன் பேசுகையில், "தெகலராயி கிராமத்திற்கு சாலை வசதிகள் இருந்தாலும் அதன் எல்லைகள் மலைப் பகுதியுடன் இணைந்திருப்பதால் மறைவான பகுதிகளில் மக்கள் கஞ்சா வளர்த்து வருகின்றனர். முதற்கட்டமாக, டிரோன் மூலம் இந்தப் பகுதிகளில் ஆய்வு செய்ததில் 3.55 ஏக்கர் அளவில் கஞ்சா சாகுபடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதில், 4 பேருக்குச் சொந்தமான 1.20 ஏக்கர் பட்டா நிலமும், ஒருவருடைய 0.05 ஏக்கர் அரசு நிலமும், 9 பேரின் சர்வே செய்யப்படாத 1.85 ஏக்கர் நிலமும், 5 பேரின் 0.35 ஏக்கர் அளவிலான வனப்பகுதியிலுள்ள நிலமும் அடங்கும்.

முதலில் கிடைத்த தகவல்களின்படி, கிராமத்தில் 10 இடங்களில் சிறிய அளவில் கஞ்சா சாகுபடி செய்வதாகத் தெரியவந்தது. ஆனால், ட்ரோன் மூலம் செய்த ஆய்வில் பெரிய அளவில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இங்குள்ள பழங்குடியின மக்களை கஞ்சா சாகுபடி செய்வதிலிருந்து தடுக்க அவர்களுக்கு சில்வர் ஓக், காபி மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றை பயிரிடுவதற்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

இருப்பினும், அடர்ந்த மரங்களின் நடுவே கஞ்சா பயிரிடுவதால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர். மேலும், மாற்றுப் பயிர்களை பயிரிடுவதால், போலீசார் அப்பகுதியை கண்காணிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். தொலைதூரப் பகுதிகளைக் கூட கண்காணிக்க நாங்கள் ட்ரோன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்டம் முழுவதும் கஞ்சா சாகுபடியைத் தடுப்பதில் காவல்துறையின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர், "நாங்கள் ஒரு தெளிவான செய்தியை சொல்ல விரும்புகிறோம். மக்கள் எங்கு கஞ்சாவை பயிரிட முயற்சித்தாலும், நாங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். பழங்குடியின சமூகத்தினரிடையே சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com