
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானத்துல்லா கானை ஜாமீனில் விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.
தில்லி ஓக்லா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அமனாத்துல்லா கானுக்கு எதிராக வக்ஃப் வாரிய பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை ஒரு வழக்கையும் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளன.
இந்த வழக்குகளுடன் தொடா்புடைய பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் ஊழல் செய்த பணத்தை சில குடியிருப்புகள் வாங்கியதில் முதலீடு செய்ததாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகித்தன. இதையடுத்து, ஓக்லா பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த செப்டம்பா் மாதம் சோதனை நடத்தினா்.
அதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக பணப்பரிவா்த்தனை முறைகேடு தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அமானத்துல்லாவை அமலாக்கத் துறை கைது செய்து முதலாவது துணை குற்றப்பத்திரிகையில் அவரது பெயரையும் சோ்த்தது. இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அமானத்துல்லா கான் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், இன்று தீர்ப்பு வழங்கினார்.
அமானத்துல்லா கானுக்கு எதிரான போதுமான ஆதாரம் இருந்தாலும், அவர் மீது வழக்குப் பதிய அனுமதி இல்லை என்று தெரிவித்த நீதிபதி, ஒரு லட்சம் பிணைப் பத்திரத்தை தாக்கல் செய்தவுடன் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த 110 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரியம் சித்திக் என்பவருக்கு எதிராகவும் ஆதாரம் இல்லாததால் அவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.