
காவல்துறை உடையில் இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த நபர், செல்போனில் விடியோ காலில் ஒருவரை அழைத்து அவரை தனது வலையில் வீழ்த்த நினைத்திருந்தார். ஆனால் போனை எடுத்ததே ஒரு போலீஸ் ஆகி, மோசடியாளருக்கு விரிக்கப்பட்டது அந்த வலை.
இந்த ஒட்டுமொத்த செல்போன் அழைப்பும் விடியோவாக படமெடுக்கப்பட்டு இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோசடியாளர் இன்று மீம் கிரியேட்டர்களின் ஹீரோவாகிவிட்டார்.
அண்மைக் காலமாக இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்ததும் புதிய மோசடியை கண்டுபிடித்துவிடுவார்கள் மோசடிக்காரர்கள்.
இதுபோன்றநிலையில்தான், காவலர் உடை அணிந்துகொண்டு விடியோ காலில் அப்பாவி யாராவது சிக்கினால் ஏமாற்றலாம் என்று அழைத்த மோசடிக் கும்பலைச் சேர்ந்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அதாவது, தான் ஏமாற்றலாம் என்று நினைத்திருந்த ஏமாளி வேறுயாருமல்ல கேரள காவல்துறைதான். திரிசூர் சைபர் பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர்தான் அந்த விடியோ காலை எடுத்தவர். நல்வாய்ப்பாக, அவர் தனது போனில் யார் பேசுகிறார் என்பதை உடனடியாக புரிந்துகொண்டு, அருகில் இருந்தவருக்கு தகவல் சொல்ல ஒட்டுமொத்த உரையாடலையும் மற்றொரு காவலர் விடியோ எடுத்துவிட்டார்.
காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி விடியோ காலை எடுத்ததும், அதில் காவலர் உடை அணிந்து பேசியவர் தன்னை மும்பை காவல்துறை என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது திரிசூர் காவலர், தனது கேமரா சரியாக வேலை செய்யவில்லை என்று லேசாக தனது அடையாளம் தெரியாத வகையில் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, காவல்துறை அதிகாரி தனது கேமராவை சரி செய்து, தனது சீருடையுடன் விடியோ காலில் வந்த போது, மோசடிக் கும்பலைச் சேர்ந்தவருக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று பிறகு துடித்திருக்கலாம்.
இதற்குள், திரிசூர் காவலர், தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த மோசடி வேலையை இதோடு நிறுத்திக்கொள். உன் முகவரி, இடம் என அனைத்தும் எனக்குக் கிடைத்துவீட்டது. இது கேரள சைபர் செல். எனவே இந்த மோசடி வேலையை இதோடு நிறுத்திவிடுவது உனக்கு நல்லது என்று அறிவுரை வழங்கினார்.
இந்த விடியோவை திரிசூர் காவல்துறை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மோசடியாளர், உண்மையிலேயே காவல்துறைக்கு போன் சென்னை தன்னையே மோசடி செய்துகொண்டார் என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.