நேரடி விமான சேவை! ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்

இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை பற்றி...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி
Published on
Updated on
1 min read

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஜெய்சங்கரை நேரில் சந்தித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தினார்.

கிழக்கு லடாக்கின் பதற்றம் வாய்ந்த பகுதிகளில் இரு நாட்டு படை வீரர்களும் விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில்,

“இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் சமீபத்திய பின்வாங்கல் குறித்து பேசினோம். மேலும் இருதரப்பு உறவுகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். உலக நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவையை தொடங்க இந்தியாவை வாங் யி வலியுறுத்தியுள்ளார்.

மோதலுக்கு முடிவு

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியா அக். 22 அறிவித்தது.

தொடர்ந்து, பிரிக்ஸ் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் உறுதிபூண்டனர்.

மேலும், இருநாட்டு வீரர்களும் பதற்றம் வாய்ந்த டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் படைகளை பின்வாங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.