அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி கைது!

அமெரிக்காவில் அன்மோல் பிஷ்னோய் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
அன்மோல் பிஷ்னோய்
அன்மோல் பிஷ்னோய்
Published on
Updated on
1 min read

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் உதவியுடன் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்.14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கடந்த அக்.12-ஆம் தேதி பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்த குற்றங்கள் உள்பட 18 குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். மேலும், தேசிய புலனாய்வு முகமையின் இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அன்மோல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அவா் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதுங்கியிருப்பதாக மும்பை காவல்துறையினர் தகவல் வெளியிட்ட நிலையில், அமெரிக்க காவல்துறையும் அதனை உறுதி செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து, அன்மோலுக்கு எதிராக ரெட் நோட்டீஸை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஃப்ரெஸ்னோ நகரில் இருந்த அன்மோலை அமெரிக்க காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அன்மோலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அா்ஷதீப் சிங் கில் என்ற அா்ஷ் தல்லா கனடாவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.