தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புது தில்லி வர வேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள், தாய்லாந்தின் புக்கெட் நகரில் 80 மணிநேரத்துக்கும் மேலாக தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் புதுதில்லி வந்தனரா என்பது பற்றிய தகவல் கிடைக்கப்பெறவில்லை.
தாய்லாந்தில் சிக்கித் தவித்த பயணிகள் பலரும், சமூக வலைதளம் வாயிலாக தங்களது அதிருப்தியையும் கோபத்தையும் கருத்துகளாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிக்க.. மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து நவம்பர் 16ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புது தில்லி புறப்படவிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு, விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, கோளாறு சரி செய்யப்படாததால், அவர்கள் வெளியே இறக்கப்பட்டனர். விமானமும் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விமானம் தயாராகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, இரண்டு மணி நேரம் வானில் பறந்தது. ஆனால், கோளாறு மீண்டும் ஏற்பட்டதால் புக்கெட் நகருக்கே விமானம் திரும்பியது. 80 மணி நேரம் ஆன பிறகும், பயணிகள் புக்கெட் நகரிலேயே இருக்கிறார்கள். இதுவரை மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.
புக்கெட் - தில்லி விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதுவரை ஏர் இந்தியா எதுவும் சொல்லவில்லை. இந்திய தூதரகமும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நம்பிக்கை இழந்து இருக்கிறோம், எங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்று ஒரு பயணி பதிவிட்டுள்ளார்.
ஏராளமானோர் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளில் பணியில் சேர முடியாமல் தவிக்கிறார்கள் என்று ஒரு பயணியும் பதிவிட்டுள்ளார்.
பலரும் ஒருமித்தக் குரலில் சொல்வது, ஏர் இந்தியா ஊழியர்கள் எங்களுக்கு எந்த தகவலும் சொல்ல மறுக்கிறார்கள் என்பதே. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.