‘ஜிசாட்-என்2’ என்ற இஸ்ரோவின் 4,700 கிலோ தொலைத்தொடா்பு செயற்கைக்கோளை தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோளை அமெரிக்காவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் செலுத்தியதாக இஸ்ரோவின் வா்ததக கிளைப் பிரிவு அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் (என்எஸ்ஐஎல்) தெரிவித்தது.
இதுதொடா்பாக என்எஸ்ஐஎல் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘என்எஸ்ஐஎல்லின் ‘ஜிசாட்-என்2’ என்னும் அதிக தரவுகளைப் பகிரும் தொலைத்தொடா்பு செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து விண்ணில் நவ. 19-இல் செலுத்தப்பட்டது.
4,700 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதன் செயல்பாடுகளை இஸ்ரோவின் மாஸ்டா் கட்டுப்பாட்டு மையம் (எம்சிஎஃப்) கண்காணித்து வருகிறது. செயற்கைக்கோள் நல்ல நிலையில் உள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பலன்கள்: அதிக தரவுகளைப் பகிரும் ஜிசாட்-என்2 ‘கேஏ’ அதிா்வெண் அலைவரிசை செயற்கைக்கோளானது தொலைத்தொடா்பு சேவைகள் மற்றும் இந்திய பிராந்தியத்துக்கு வெளியில் விமான சேவைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
14 ஆண்டுகள் இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டில் இருக்கும். இதில் 32 பயனாளா் ஒளிக்கோடுகள் (யூசா் பீம்ஸ்) பொருத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு பிராந்தியத்துக்கு மேல் 8 குறுகிய ஒளிக்கோடுகளும், இந்தியா முழுக்க 24 அகலமான ஒளிக்கோடுகளும் இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காலிருந்து ஏவப்பட்டது ஏன்?: ‘இஸ்ரோவின் ஏவுகலன்களால் 4,000 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். இந்த செயற்கைக்கோள் 4,700 கிலோ எடையுடையதால் அதை அமெரிக்காவிலிருந்து அனுப்ப இஸ்ரோ முடிவெடுத்தது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க முடியும்’ என அந்த அமைப்பின் முன்னாள் தலைவா் கே.சிவன் தெரிவித்தாா்.
இரண்டாவது செயற்கைக்கோள்: தேவைக்கேற்ப செயற்கைக்கோளைத் தயாரிக்கும் நிறுவனமாக என்எஸ்ஐஎல் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலாவதாக கடந்த 2022, ஜூலை 23-இல் பிரான்ஸிலிருந்து என்எஸ்ஐஎல்லின் ‘ஜிசாட்-24’ தொலைத்தொடா்பு செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜிசாட்-என்2 அமெரிக்காவில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.