2 மணிநேரமாக இதயத் துடிப்பு இல்லாதவரை பிழைக்க வைத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

ஒடிஸாவில் இதயத் துடிப்பு நின்றவரை 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு பிழைக்க வைத்தது பற்றி...
சுபாகாந்த்துடன் மருத்துவர்கள்.
சுபாகாந்த்துடன் மருத்துவர்கள்.Express
Published on
Updated on
1 min read

புவனேஷ்வர்: இதயத் துடிப்பு நின்று 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நோயாளியை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர்.

ஒடிஸா மாநிலம் நயகரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாகாந்த். ராணுவ வீரரான இவர், கடண்டஹ் செப்டம்பர் 30-ஆம் தேதி இதயப் பிரச்னை காரணமாக ரான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தீவிர மற்றும் எக்மோ பிரிவு சிறப்பு மருத்துவர் ஸ்ரீகாந்த் பெஹேரா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 40 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவருக்கு இதயத் துடிப்பு வரவில்லை.

இந்த சூழலில், நோயாளி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பார்கள், ஆனால், எய்ம்ஸ் மருத்துவக் குழு தொடர்ந்து நுரையீரல் மற்றும் இதயத்தை வேலை செய்ய வைக்கக் கூடிய ஈசிபிஆர் சிகிச்சை தர முடிவு செய்ததாக மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனைத்துத் துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் உயிர் காக்கு கருவியுடன் தீவிர சிகிச்சையை தொடங்கியுள்ளனர். 2 மணிநேரப் போராட்டத்துக்கு பிறகு நோயாளியின் இதயம் துடிக்கத் தொடங்கியுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக முதலில் துடிக்கத் தொடங்கினாலும், 30 மணிநேரத்தில் நோயாளியின் இதயத் துடிப்பு மேம்பட தொடங்கியுள்ளது. அடுத்த 96 மணிநேரத்தில் எக்மோ கருவியில் இருந்து நோயாளி வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிற உறுப்புகளும் கணிசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்ததாக மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மேலும், அவரை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து வெற்றிகரமாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் மீட்டதாக தெரிவித்தார்.

நோயாளி சுபாகாந்த்தின் தய மினாட்டி சாஹு கூறுகையில், “இது அதிசயம். நாங்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை, மேலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று தொடர்ந்து சொன்னார்கள். மருத்துவர்கள்தான் எங்களுக்கு கடவுள். என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியதாவது:

“நோயாளியின் இதயத் துடிப்பதை நின்று 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஈசிபிஆர் போன்ற மேம்பட்ட மருத்துவ கருவிகள், இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதில் ஒரு கேம்-சேஞ்சராக இருக்கிறது.

ராணுவ வீரர் தற்போது சீராக உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.