வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கணவர் ஃபகத் அஹமத் தோல்வியடைந்தது குறித்து நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு.
தனது கணவரும், அனுசக்தி நகர் வேட்பாளருமான ஃபகத் அஹமதுடன் நடிகை ஸ்வரா பாஸ்கர்.
தனது கணவரும், அனுசக்தி நகர் வேட்பாளருமான ஃபகத் அஹமதுடன் நடிகை ஸ்வரா பாஸ்கர்.
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 187 தொகுதிகளில் வெற்றி பெற்று 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றிபெற்று 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் இமாலய வெற்றியைப் பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில், பாஜக அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவீஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஸ்வரா பாஸ்கரின் கணவர் ஃபஹத் அஹமத் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அனுசக்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்துவந்த ஃபஹத் அஹமத், வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றின் முடிவில் 3,378 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சனா மாலிக்கிடம் தோல்வியடைந்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வரா பாஸ்கர், “அனுசக்தி நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஃபகத் அஹமத் முன்னிலை வகித்துவந்தார். ஆனால் 17, 18, 19 சுற்றுகளில் திடீரென 99 சதவீதம் சார்ஜ் செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வந்தவுடன் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்றார்.

நாள் முழுக்க வாக்களிக்கப் பயன்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி 99 சதவீத சார்ஜுடன் இருந்தன? 99 சதவீத சார்ஜ் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்திலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அதிக வாக்குகள் பதிவானது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனுசக்தி நகர் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்கள்
அனுசக்தி நகர் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்கள்தேர்தல் ஆணையம்

ஸ்வரா பாஸ்கரின் கணவரும், வேட்பாளருமான ஃபஹத் அஹமதும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். 16 வது சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் வரை முன்னிலையில் இருந்ததாகவும், 99 சதவீத சார்ஜ் செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டப் பிறகு வாக்கு எண்ணிக்கை குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுசக்தி நகர் மும்பை தெற்கு - மத்திய மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றது. மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் சிவசேனை (யுபிடி) வேட்பாளர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஹரியாணா தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பேட்டரி சாா்ஜ் தொடா்பாக காங்கிரஸ் தெரிவித்த புகாருக்கு தோ்தல் ஆணையம் மறுப்புத் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com