பட்னவீஸ் - ஹேமந்த் சோரன்
பட்னவீஸ் - ஹேமந்த் சோரன்

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட்டணி!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி. ஜார்க்கண்ட் மாநில ஆட்சியை தக்கவைத்தது இந்தியா கூட்டணி.
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களின் பேரவைத் தேர்தலும், 14 மாநிலங்களில் உள்ள 48 பேரவைத் தொகுதிகளுக்கும், வயநாடு உள்ளிட்ட 2 மக்களவைத் தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

  • மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை என்ற 145 தொகுதிகளை விட அதிக இடங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

  • ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், பாஜக மட்டுமே 130 இடங்களில் வெற்றிபெற்று, மாநிலத்தின் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து, பிறகு காட்சி மாறி, இந்தியா கூட்டணி வெற்றியைப் பதிவு செய்தது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியில், பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை கட்சிகள் இணைந்து பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. இக்கூட்டணி ஒட்டுமொத்தமாக 231 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 145 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் வெறும் 50 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலையில் உள்ளது

ஜார்க்கண்ட் பேரவையில் 41 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி என்ற நிலையில், இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை வகித்து, மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இதன் மூலம் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட்டில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலையை பதிவு செய்திருக்கின்றன. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 24 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன. இதர கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் பா்ஹைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com