மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்; மீண்டும் வாக்குசீட்டு முறை வேண்டும்! - கார்கே

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
Mallikarjun Kharge
மல்லிகார்ஜுன கார்கே
Published on
Updated on
2 min read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பலமுறை பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்வில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற எந்த பெரிய மேற்கத்திய நாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து இன்று தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே,

'ஹரியாணாவில் காங்கிரஸ் தோல்விக்கு வாக்குப்பதிவு செயல்முறையே காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறோம்.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அது தேவையும் இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே எங்களுக்கு வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும்.

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மீண்டும் வாக்குசீட்டு முறை தேர்தலைக் கொண்டுவர வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரதமர் மோடி அவரது வீட்டிலோ ஆமதாபாத் குடோனிலோ வைத்துக்கொள்ளட்டும்.

உண்மையில் மக்களைப் பிரிக்க நினைப்பது பாஜகதான். நாட்டில் ஒற்றுமை வேண்டுமெனில், பாஜகவினர் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்த வேண்டும். இந்திய மக்களின் நம்பிக்கையான அரசமைப்புப் புத்தகத்தை வலுவிழக்கச் செய்கிறார்கள்.

ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்ற ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தைமேற்கொண்டார். இந்த பயணத்தில் நாட்டு மக்கள் அவருடன் இணைந்தனர். இந்த சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் அவருடன் இணைந்தனர்.

அரசமைப்புச் சட்டம் சாதாரணமாக உருவாக்கப்படவில்லை. அதனை உருவாக்க காங்கிரஸ் கட்சி மிகவும் கடினமாக உழைத்தது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பு உள்ளது.

பாஜக அரசு நிலையாக இல்லை, கூட்டணிக் கட்சிகளை நம்பியே உள்ளது. இன்று, அவர்கள் (பாஜக) பெரும்பான்மை கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு காலை தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடுவுக்கும், மற்றொரு காலை பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் வைத்துள்ளனர். இந்த இரண்டு கால்களையும் பயன்படுத்தி பிரதமர் மோடி நடக்கிறார். இருவரில் ஒருவர் பின்வாங்கினால் உங்கள் அரசு கவிழ்ந்துவிடும்.

பிரதமர் நரேந்திர மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுகிறார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.