நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி அவமதித்ததாக பாஜக எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) அரசியலமைப்பு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி அவமதித்ததாக பாஜக எம்.பி. அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார். அரசியலமைப்பு தின விழா குறித்து அமித் மால்வியா பகிர்ந்த விடியோவில், தேசிய கீதம் இசைத்தபோது, அனைவரும் நேராகவும் கீழ் குனிந்தும் நின்றனர்; ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பக்கவாட்டில் திரும்பி நின்றார்.
குடியரசுத் தலைவரும் மற்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தபோது, ராகுல் அமர முயற்சித்தது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் வரவேற்காமல் மேடையை விட்டு வெளியேறுவது ஆகிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ராகுலின் இவ்வாறான செயல்கள் குறித்து அமித் மால்வியா கூறியதாவது, ``தேசிய கீதம் முடிந்ததும், மேடையில் இருந்த அனைவரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்; ஆனால், ராகுல் காந்தி மேடையைவிட்டு விலக முயற்சித்தார்.
காங்கிரஸ் எப்போதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவமதிக்கிறது. ஏனென்றால், அவர்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண். ராகுலும் அவரது குடும்பத்தினரும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.களை வெறுக்கிறார்கள் என்பது தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.
இருப்பினும், பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியோ பிற காங்கிரஸ் தலைவரோ யாரும் இதுவரையில் பதிலளிக்கவில்லை.
இதையும் படிக்க: கார்கேவும் ராகுலும் செவ்வாய் கிரகம் சென்று விடுங்கள்: பாஜக