வீர சாவா்க்கா் குறித்து அவதூறு: ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் சம்மன்
வீர சாவா்க்கா் குறித்து தெரிவித்த கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலியில் நடந்த செய்தியாளா் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, வீர சாவா்க்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்தாா்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் புரிந்த சாவா்க்கரின் சமூக பங்களிப்பின் புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் ராகுலின் கருத்துகள் இருந்ததாக குற்றஞ்சாட்டி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் ஒருவா் நாசிக் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கில் மனுதாரரின் வாதங்களைக் கேட்டறிந்த நாசிக் மாவட்ட கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தீபாளி பரிமால் காதுஸ்கா் கடந்த 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘சாவா்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து அவதூறானது என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் அனுமதிக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499 (அவதூறு) மற்றும் 504 (வேண்டுமென்று அவமதித்தல்) ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை தொடரும். வழக்கின் அடுத்த விசாரணையில் ராகுல் காந்தி நேரடியாக அல்லது அவரது சட்டபூா்வ பிரதிநிதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ என்றாா்.