'மோடியின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள்' - ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு.
Rahul Gandhi
ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'சமீபத்தில், கோஹானாவில் உள்ள சுவையான ஜிலேபிகள் பற்றியும் அவற்றை அதிகளவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் பேசியிருந்தேன்.

இந்தியாவில் 5,500 சிறு வணிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு முறையான ஆதரவு அளித்தால் அவர்கள் தங்கள் பொருள்களை உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும். அவர்களுக்கு நிதி, தொழில்நுட்பம், நெட்வொர்க் தொடர்புகள், விளம்பரம் மற்றும் சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கான கொள்கைகள் தேவை.

இந்த ஆதரவு இருந்தால், நமது மிட்டாயை மட்டுமல்ல, சோப்பூரிலிருந்து ஆப்பிள்களையும், பல்லாரியில் இருந்து ஜீன்ஸ், கோலாபுரி செருப்புகள், மேகாலயாவில் இருந்து அன்னாசிப் பழம், பிகாரில் இருந்து மக்கானா, மொராதாபாத்தில் இருந்து பித்தளைப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருள்களை உலகத்தில் மக்கள் பெற முடியும். பனாரசி புடவைகளின் உலகளாவிய வெற்றி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அனைவருக்கும் பயன் தரும் வேகமான பொருளாதார வளர்ச்சியும், உலக அரங்கில் போட்டியிடக்கூடிய உற்பத்திப் பொருளாதாரமும் இந்தியாவுக்குத் தேவை.

மோடி, ஒரு சில நண்பர்களின் நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்துவதைப்போல் அல்லாமல், சிறு வணிகங்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

இளைஞர்களுக்குத் தேவையான கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்குவதே இந்த வளர்ச்சிக்கு ஒரே வழி. படித்த, ஆற்றல்மிக்க இளம் தலைமுறையின் தேவைகளை பூர்த்தி செய்து இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

ஹரியாணா மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. கோடிக்கணக்கானோரை முறைசாரா வேலைகளுக்குத் தள்ளி, சிறுதொழில்களை அழித்து லட்சக்கணக்கான மக்களை இந்தியாவைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அதானியால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் மட்டுமே அவர்களின் ஆர்வம் உள்ளது.

ஹரியாணா மக்கள் இதை நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். மோடியின் நட்பு முதலாளித்துவக் கொள்கைகளின் சக்கரவியூகத்தை உடைக்க அவர்கள் விரைவில் அடுத்த அடியை அடிப்பார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

ஹரியாணா தேர்தல்

ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை(அக்.5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி-காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி- ஆசாத் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. இந்த 4 கூட்டணிகளிலும் இடம் பெறாமல் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com