ஹரியாணாவில் வெல்லப் போவது யார்? - தேர்தல் நிலவரம்!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் பற்றி...
ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி / ராகுல் காந்தி
ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி / ராகுல் காந்திபிடிஐ
Published on
Updated on
3 min read

பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் ஹரியாணாவை இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று கைப்பற்றப் போவது யார்?

ஹரியாணா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நாளை மறுநாள், அக். 5 ஆம் தேதி, சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள அனைத்து 10 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, கடந்த, 2024,    மக்களவைத் தேர்தலில் பாதி - 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, மீதி 5 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மூன்று சுயேச்சைகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் மாநிலத்தில் சிறுபான்மை அரசாகத் தொடருகிறது.

பத்தாண்டுகளாகத் தொடரும் தற்போதைய ஆட்சிக்கு எதிரான மக்களின்  மனநிலை உள்பட பல்வேறு காரணங்களால் இந்த முறை ஹரியாணாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது பாரதிய ஜனதாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து காங்கிரஸும், ஜனநாயக ஜனதா கட்சியும் ஆசாத் சமாஜ் கட்சியும் இணைந்தும்,  இந்திய தேசிய லோக் தளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. இந்த 4 கூட்டணிகளிலும் இடம் பெறாமல் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் ஜாட் மக்கள் அதிகம் இருப்பதாகக் கருதப்பட்டாலும் உள்ளபடியே பிற பிற்பட்ட வகுப்பினருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் இவர்கள் இருக்கின்றனர். ஜாட் மக்களும் தலித் மக்களும் எவ்வாறு, யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றெனக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு சாதி ரீதியில் வாக்குகள் பிரிந்து விழலாம் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நான்கு அணிகளும் ஐந்தாவதாக ஆம் ஆத்மியும் போட்டியிட்டாலும் கிட்டத்தட்ட பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸுக்கும்தான் இருமுனைப் போட்டி என்றாகிவிட்ட  நிலையில் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் ஜாட் மக்களின் வாக்குகளும்  பெரும்பங்கு வகிக்கும்.

ஜாட் மக்கள், ஜாட் அல்லாதவர்கள் என்ற பிரிவினை வெளிப்படையாகத் தேர்தல் களத்தில் காணப்படுகிறது. இந்த சாதி, மதங்கள் போன்ற பிரிவுகளை எல்லாம் தாண்டி, அக்னிபத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பக் கொண்டுவருதல், வேலையில்லாத் திண்டாட்டம், அரசு வேலைகள், முதியோர் ஓய்வூதியத் திட்டம், மகளிருக்கான மாத உதவித் தொகை போன்றவையும் தேர்தலில் குறிப்பிடும்படியான பங்காற்றுகின்றன. மேலும், சட்ட – ஒழுங்குப் பிரச்சினையும் இருக்கிறது.

தவிர, விவசாயிகள் மத்தியில் பாரதிய ஜனதாவுக்கு எதிராகப் பெரும் கோபமும் நிலவுகிறது. தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்ட காலத்தில் தொடங்கிய கோபம் இது. ஹரியாணாவுக்கும் தில்லிக்கும் இடையே சிங்கூ  எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இந்த கோபம், வெறுப்பாகவும் விரக்தியாகவும் மாறிவிட்டது. பஞ்சாபிலிருந்து திரண்டெழுந்த விவசாயிகளும் பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் ஷம்புவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டம் தற்போதைய தேர்தலிலும் எதிரொலித்துக் கொண்டுதானிருக்கிறது. முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் விஜ்,  பவன் சாய்னி, சந்தோஷ் சரவண், கிருஷ்ண வேதி, தேவேந்தர் பப்லி மற்றும் அனூப் தனக் ஆகிய வேட்பாளர்கள் அனைவருமே தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

(இதனிடையேதான், அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராகவும் நடிகையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான கங்கனா ரணாவத் அதிரடியாகக் கருத்துச் சொல்ல, சூழ்நிலை பதற்றமாகவே கட்சியில் அனைவரும், இது பாரதிய ஜனதாவின் கருத்து அல்ல என்று மறுக்க வேண்டியதாகிவிட்டது. பிறகு கங்கனாவே ‘ஸாரி’ சொல்லிவிட்டார்).

மல்யுத்த வீர்ர்களின் போராட்டமும் இதற்கு இணையானதுதான். வினேஷ் போகத், சாக்-ஷி மாலிக், பஜ்ரங் புனியா போன்ற பிரபல வீரர்கள் எல்லாமும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக அப்போதைய சக்திவாய்ந்த இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கை எதிர்த்துப் போராடினர்.

சிறிய மாநிலமென்றாலும் ஹரியாணாவிலிருந்து அதிகளவிலானோர் ராணுவத்தில் சேருகின்றனர். அக்னிபத் சேவை முடிந்து வெளிவரும் இளைஞர்களுக்கு இணைநிலை ராணுவ மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தற்போது பாரதிய ஜனதா அரசு அறிவித்தாலும்கூட, அக்னிவீர் திட்டம் காரணமாக மக்கள் மத்தியில் நிலவும் வெறுப்பு அகலவில்லை.

பிராமணர்கள், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அணிச் சேர்க்கையும் ஜாட் அல்லாதவர்கள் வாக்கு வங்கியும்கூட தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும்.

தெற்கு ஹரியாணா மற்றும் கிராண்ட் டிரங்க்  சாலைப் பகுதிகளில் - கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தப் பகுதிகளில் குறிப்பிடும்படியான ஆதரவு கிடைக்காவிட்டாலும்கூட - பாரதிய ஜனதா கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் வாக்கு வங்கியில் ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கட்சியும் சேதாரங்களை ஏற்படுத்தலாம் என பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது. காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையே ஜாட் மக்களின் வாக்குகள் சிதறிப் போய்விடும் என்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் நம்புகின்றனர்.

பேரவைத் தேர்தலில் தெற்கு ஹரியாணா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. குருகிராம், பரீதாபாத், பிவானி – மகேந்திரகர்க் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்தப் பகுதியில் 27 பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த மூன்று மக்களவைத் தொகுதிகளிலுமே கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாதான் வெற்றி பெற்றது.

பிற பிற்பட்ட வகுப்பினர் வாக்குகளை ஒருங்கிணைத்துக் கைப்பற்றிவிடலாம்  என்று பாரதிய ஜனதா திட்டமிடுகிறது. முதல்வர் பதவியிலிருந்து எம்.எல். கட்டர்  அகற்றப்பட்டு பிற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த நயப் சிங் சாய்னியை முதல்வராக்கியதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

மறுபுறத்தில் கடந்த பத்தாண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் காங்கிரஸ், தனக்கு ஆதரவாக ஜாட் – தாழ்த்தப்பட்டோர் – முஸ்லிம் வாக்குகளைச் சிதறாமல் பெற்றுவிட முடியும் என்றும் நம்புகிறது.

ஹரியாணாவின் மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதமுள்ள தலித் வாக்காளர்கள் மீது அனைத்து அணிகளுமே கவனமாக இருக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் தலித் வாக்குகளில் சுமார் 68 சதவிகிதத்தை காங்கிரஸும் 24 சதவிகிதத்தை பாரதிய ஜனதாவும் பிரித்துக்கொண்டன. தலித்  வாக்குகளின் இந்த இடப்பெயர்வால் பாரதிய ஜனதா பெரும் பின்னடைவைச் சந்தித்தது (2019 மக்களவைத் தேர்தலில் தலித் வாக்குகளில் பாரதிய ஜனதா 51 சதவிகிதமும் காங்கிரஸ் 25 சதவிகிதமும் பெற்றிருந்தன).

மாநிலத்தில் யாருடனும் கூட்டணி சேராமல் 88 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் நம்பிக்கையுடன் பிரசாரம் செய்தாலும் எந்த அளவுக்கு வெற்றி சாத்தியம் என்பது தெரியவில்லை. பாரதிய ஜனதாவுக்கு எதிரான, காங்கிரஸ் ஆதரவு வாக்குகளைத்தான் ஆம் ஆத்மி பிரிக்கும் எனக் கூறப்பட்டாலும் தேர்தலில் போட்டி இருமுனைப்பட்டிருப்பதால் ஆம் ஆத்மி எத்தகைய பங்காற்றும் என உறுதியாகக் கூற இயலவில்லை.

இந்தத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கட்சியும் (இரண்டிலும் தாழ்த்தப்பட்ட  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன) தனித்தனியே போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் எந்த அளவு தலித் வாக்குகளைப் பெறப் போகிறது என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், தாழ்த்தப்பட்டோர் பெயரிலான கட்சிகள் என்பதாலேயே மக்கள் வாக்களித்துவிட மாட்டார்கள். ஹரியாணாவில் தலித் மக்கள் தனிப் பிரிவினராக இல்லை. தவிர, அடையாள அரசியலும் கிடையாது என்று குறிப்பிடும் அரசியல் பார்வையாளர்கள், இந்த முறை தேர்தலில் போட்டி இரு முனைப்பட்டுவிட்ட நிலையில், இவர்களால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியும் என்று தோன்றவில்லை என்கின்றனர்.

முதன்மையான இரு கட்சிகளிலுமே 20-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த இரு முனைப் போட்டியை எப்படியாவது பல முனைப் போட்டியாக மாற்றிவிட வேண்டும், முடியும் என்று மற்ற இரு அணிகளும் நம்புகின்றன.

தலைநகர் தில்லிக்கு அருகேயுள்ள மாநிலமான ஹரியாணாவில் எப்படியும் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்று நம்புகிறது காங்கிரஸ்; தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறது பாரதிய ஜனதா. வரும் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போதுதான் தெரியும் யாருக்கு வெற்றி என்பது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com