

தமிழக அரசியலில் சின்னங்கள் என்பது கட்சிகளின் குறியீடுகளாக மட்டுமில்லாமல், கட்சியின் கொள்கை, நிலைப்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றின் அடையாளங்களாகப் பிரிதிபலிக்கின்றன. எழுத்தறிவு இல்லாத மக்களும் எளிய பாமர மக்களும் புரிந்துகொள்ளும் அடையாளங்களாக சின்னங்கள் விளங்குகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று அரசியல் சாசனம் ஏற்கும் வரை கட்சிகளுக்கு தனிச்சின்னம் என்பதே கிடையாது. வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களுக்கு வண்ணங்கள் ஒதுக்கப்படும், அதன் அடிப்படையிலேயே வாக்குகளை சேகரித்தனர், மக்களும் வாக்களித்தனர்.
கடந்த 1950 ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு, 1951-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதைய காலத்தில் ஒவ்வொரு சின்னங்களுக்கென தனித்தனியாக வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் சின்னம் உள்ள வாக்குச்சீட்டை அந்தந்த பெட்டிகளில் செலுத்த வேண்டும், அதன்பின்னர், வாக்குச்சீட்டில் சின்ன்ங்கள் பொறிக்கப்பட்டு, விரும்பிய சின்னத்தில் முத்திரையிடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதைய காலத்தில் மின்னணு இயந்திரத்தில் பட்டனை கிளிக் செய்தால் தாங்கள் விரும்பும் சின்னத்துக்கு வாக்குகளாகப் பதிவாகும் சூழல் மாறியுள்ளது.
சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை அரசியல் கட்சிகளுக்கும் சின்னங்களுக்குமான பிரச்னை ஓய்ந்தபாடில்லை, தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்குவதும், கட்சிகள் நீதிமன்றத்தை நாடி மீட்டெடுப்பதும் தொடர் கதைகளாக உள்ளன. தேசிய கட்சிகள் முதல் புதிய கட்சிகள் வரை சின்னங்கள் தொடர்பான பிரச்னைகளைச் சந்திக்காத கட்சிகளே இல்லை எனச் சொல்லலாம்.
தமிழக அரசியல் வரலாற்றில் சின்னங்கள் கடந்து வந்த பாதையைக் காண்போம்.
பாரதிய ஜனதா
பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடிக் கட்சி ஜனசங்கம். 1951-ல் பாரதிய ஜனசங்கம் தொடங்கியபோது அந்தக் கட்சியின் சின்னமாக தீபம்(விளக்கு) இருந்தது. அவசரநிலைக்குப் பிறகு ஜனசங்கம் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனதா கட்சியாக மாறியது. அப்போது ஏர் உழவன் சின்னத்தைப் பெற்றது.
1980-இல் ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து, புதிய அடையாளத்துடன் பாரதிய ஜனதா கட்சி முறைப்படி தொடங்கப்பட்டது. அப்போது புதிய அடையாளமாக தாமரை சின்னம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தாமரை சின்னத்தை தக்க வைத்துள்ளது பாஜக.
காங்கிரஸ்
சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின்படி ராட்டைச் சக்கரம் காங்கிரஸின் அடையாளமாக இருந்தது. பின்னர், 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் , காங்கிரஸ் கட்சிக்கு இரட்டைக் காளைகள் சின்னம் ஒதுக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் கிடைத்தது.
1969-ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கட்சி பிளவுபட்டது. அப்போது, காங்கிரஸின் இரட்டைக் காளைகள் சின்னம் முடக்கப்பட்டது. இதற்குப் பிறகு, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னம் வழங்கப்பட்டது. நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னம் ஒதுக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரம்மானந்த ரெட்டியால் ஏற்பட்ட பிளவால் பசுவும் கன்றும் சின்னம் முடக்கப்பட்ட நிலையில், இந்திரா காந்தி தலைமையிலான அணியில் அதிக உறுப்பினர்கள் இருந்த நிலையில் 'கை' சின்னத்தை இந்திரா காந்தி தேர்ந்தெடுத்து வெற்றியும் பெற்றார். 1978 முதல் இன்று வரை இதுவே அக்கட்சியின் நிரந்தரச் சின்னமாகத் தொடர்கிறது.
ஜனதா கட்சி
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. இந்தக் கட்சியில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், வாஜ்பாய் தலைமையிலான ஜன சங்கம், சோஷலிஸ்ட் கட்சி, சரண் சிங் தலைமையிலான லோக் தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. அந்தந்தக் கட்சிகளின் பல்வேறு சின்னங்கள் கைவிடப்பட்டு ஏர் உழவன் சின்னம் பொதுச் சின்னமானது.
கட்சியில் பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு ஜனதா கட்சியின் தனி அடையாளம் ஒரு பக்கம் இருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சியிடம் ஏர் உழவன் சின்னம் சென்றது. பின்னர், போதிய வாக்கு சதவிகிதம் இல்லாததால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் இழந்து, சின்னமும் காணாமல் போனது.
கம்யூனிஸ்டுகள்
கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அரசியலுக்காக ஆரம்பத்தில் கதிர் அரிவாள் சின்னத்தை வைத்திருந்தாலும் , 1960-ல் இந்தியா - சீனா போருக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிளவுபட்டது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரண்டாகப் பிரிந்து, தனித்தனி சின்னங்கள் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னமும் இந்திய கம்யூ. கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னமும் கிடைத்தன.
இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரே சின்னத்தை தன்வசம் வைத்துள்ளன கம்யூனிஸ்டு கட்சிகள்.
அதிமுக
தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மிகவும் சக்திவாய்ந்த அடையாளங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இன்றளவும் சிறிய கிராமங்களில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்காக இரட்டை இலை உயிர்ப்புடன் உள்ளது.
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக-வை தொடங்கினார் எம்ஜிஆர், 1973-இல் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலை முதல் தேர்தலாக அதிமுக சந்தித்தது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய 16 சுயேட்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து, இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்தார் மாயத் தேவர்.
அந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, 'இரட்டை இலை' அதிமுகவின் தனிச் சின்னமானது.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, கட்சி இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி உருவான நிலையில் 1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இரு அணிகளும் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று உரிமைகோரின. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன.
அந்தத் தேர்தலில் ஜெயலலிதா அணிக்கே அதிக வாக்கு சதவிகிதம் கிடைத்ததால், இரு அணிகளும் இணைந்து 'இரட்டை இலை' சின்னம் ஜெயலலிதா வசமானது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மீண்டும் கட்சியில் பிளவு ஏற்பட்டு 2017-ல் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னமும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டன. இதன்பிறகு நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தனர்.
2022-இல் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இடையேயான மோதல் ஏற்பட்ட பிறகு, இரட்டை இலையை முடக்க முயற்சிக்கும் ஓபிஸ் தரப்பின் கனவு நனவாகவில்லை. தற்போது அதிமுகவின் இரட்டை இலை இபிஎஸ் தரப்பினரிடம் உள்ளது. தமிழக அரசியலில் இரட்டை இலை சின்னம் பெரும்பங்கை வைத்துள்ளது என்றே கூறலாம்.
அதேபோல, அரசியல் வரலாற்றிலேயே 234 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவைத்த பெருமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சேரும்.
திமுக
1949-இல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கினார், அப்போது திமுகவுக்கு தேர்தல் சின்னம் என்று எதுவும் இல்லை. 1952 பொதுத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை, மாறாக சில சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்தது.
1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான் திமுக முதன்முதலில் களம் கண்டது. 1951-ல் வன்னியர் குல சத்திரியர் சமூகத்துக்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கு திமுகவின் ஆதரவு இருந்த நிலையில், அந்தக் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தசாமி படையாச்சியிடம்தான் உதயசூரியன் சின்னம் இருந்தது. 1957 தேர்தலில் திமுகவில் இணைந்திருந்த கோவிந்தசாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உதயசூரியன் சின்னம் பிடித்திருந்ததால், கோவிந்தசாமியின் ஒப்புதலுடன் 1958-இல் அண்ணாதுரை உதயசூரியன் சின்னத்தை திமுகவுக்கு சொந்தமாக்கினார்.
1958-இல் மாநிலக் கட்சியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்று உதயசூரியன் சின்னமும் கிடைத்தது. அன்று முதல் இன்று 68 ஆண்டுகளைக் கடந்து தன் சின்னத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது திமுக.
மதிமுக
1993-இல் திமுகவிலிருந்து வைகோ (வை. கோபால்சாமி) 9 மாவட்டச் செயலாளர்கள், 400 பொதுக்குழு உறுப்பினர்களுடன் வெளியேறி, 1994-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற கட்சியைத் தொடங்கினார்.
1996 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 177 இடங்களில் போட்டியிட்டது. அப்போது, மதிமுக குடை சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் மதிமுக 5.78 சதவிகிதம் வாக்கைப் பெற்றாலும் ஓரிடத்தில்கூட வெல்ல முடியவில்லை. தேர்தல் தோல்வியால் கட்சி அங்கீகாரம் இழந்ததுடன் குடை சின்னமும் முடக்கப்பட்டது.
பின்னர், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 1996 முதல் 2009 வரை நடைபெற்ற தேர்தல்களில் குடை, பம்பரம் உள்ளிட்ட சின்னங்களில் மதிமுக போட்டியிட நேர்ந்தது.
போதிய வாக்கு சதவிகிதம் இல்லாததால் மதிமுக தனது மாநிலக் கட்சி அந்தஸ்தை 2010-ல் இழந்தது. இதனால் மதிமுகவின் நிரந்தரச் சின்னமான 'பம்பரம்' முடக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் மதிமுக சுயேட்சை சின்னங்களிலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவானது.
2011 பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்த நிலையில், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தலில் பம்பரம் சின்னத்தைப் பெற்ற மதிமுக, போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் இல்லாத காரணத்தினால், 2019 மற்றும் 2021 தேர்தல்களில், மதிமுக வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி மதிமுக நீதிமன்றத்தை அணுகியது. தேர்தல் ஆணையம் வழங்க மறுத்த நிலையில், இறுதியில், திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தேர்தல் ஆணையம் 'தீப்பெட்டி' சின்னம் ஒதுக்கியது. தீப்பெட்டி சின்னத்தில் நின்று துரை வைகோ வெற்றிப் பெற்றார்.
மதிமுக ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியாகவே இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் சின்னத்திற்காகப் போராட வேண்டிய நிலை உள்ளது. இந்தத் தேர்தல் எப்படியோ?
பாமக
ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், 1989-இல் பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாற்றம் பெற்றது. 1990-இல் பாமக தொடங்கியபோது அந்தக் கட்சிக்கு யானை சின்னம் கிடைத்தது. பின்னர், தமிழகத்தில் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்து புதுச்சேரியில் மட்டும் யானை சின்னம் கிடைத்தது.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமக யானை சின்னத்தில் களம் கண்டது. 1997-ல் பகுஜன் சமாஜ் கட்சி தேசியக் கட்சியாக மாறியதால் யானைச் சின்னம், பகுஜன் சமாஜ் கட்சி வசம் சென்றது. 1998 ஆம் ஆண்டு பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
1998-இல் முதன்முதலாக மாம்பழம் சின்னத்தைப் பெற்று தேர்தலில் களம் கண்ட பாமக-வுக்கு அடுத்தடுத்த தோல்விகள், வாக்கு சதவீதம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மாம்பழம் சின்னத்தை தக்க வைக்கவும் வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அப்போது ஏற்பட்டது.
அடுத்தடுத்த தேர்தல்களில் பாமகவின் வாக்கு சதவிகிதம் 6%-க்கும் கீழே குறைந்தாலும், அக்கட்சிக்குக் கிடைத்த முந்தைய வெற்றிகளின் அடிப்படையிலும், புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதாலும் மாம்பழம் சின்னத்திலேயே தற்போது வரை போட்டியிட்டு வருகிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தனது சொந்தச் சின்னமான மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டது.
இந்தச் சூழலில், தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே நிலவிவரும் மோதல் காரணமாக, மாம்பழம் சின்னத்தை தன்னுடைய அணிக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரிய ராமதாஸின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ்
கடந்த 1996 பேரவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரஸிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
கட்சி தொடங்கப்பட்ட சுமார் 2 வாரங்களில் தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் வழங்கிய பட்டியலில் இருந்து சைக்கிள் சின்னத்தை மூப்பனார் தேர்வு செய்தார். 1996 தேர்தலில் திமுக - தமாகா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 39 இடங்களில் வெற்றி பெற்றது. உடன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு அனைத்தையும் வென்று வரலாறு படைத்தது தமிழ் மாநில காங்கிரஸ்.
தமாகா அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அந்தஸ்தைப் பெற்று, சைக்கிள் சின்னத்தை தனது நிரந்தரச் சின்னமாக்கிக் கொண்டது. பின்னர், எதற்காக புதிய கட்சியை மூப்பனார் தொடங்கினாரோ, அதனைவிட்டு 2001-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 32 இடங்களில் போட்டியிட்டு, 23 தொகுதிகளை வென்றது தமாகா.
மூப்பனார் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஜி.கே. வாசன் 2002-ல் தமாகாவை மீண்டும் தாய்க் கட்சியான காங்கிரஸுடன் இணைத்தார். இதனால் 'சைக்கிள்' சின்னம் பயன்பாட்டிலிருந்து மறைந்தது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2014-இல் ஜி.கே. வாசன் மீண்டும் தமாகாவைத் தொடங்கினார். பழைய சைக்கிள் சின்னத்தை மீண்டும் பெற்று, அடுத்தடுத்தத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் ஒரேயொரு இடத்தில் போட்டியிட்டதால், சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை
கடந்த 2024 தேர்தல்களில் தமாகா மீண்டும் சைக்கிள் சின்னத்தைப் போராடிப் பெற்று போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா சைக்கிள் சின்னத்திலேயே களம் கண்டது.
தேமுதிக
தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, தன்னை மூன்றாவது சக்தியாக முன்னிறுத்தி 2005-ஆம் ஆண்டு மதுரையில் தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த்.
2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 233 தொகுதிகளில் முரசு சின்னத்தில் தேமுதிக முதன்முதலில் களம் கண்டது. அம்பாசமுத்திரம் வேட்பாளர் செய்த தவறால், அங்கு மட்டும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.
2009 மக்களவைத் தேர்தலில் நீதிமன்றத்தை சந்தித்து, முரசு சின்னத்தைப் பெற்று, தனித்துப் போட்டியிட்டு சுமார் 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெற்றது தேமுதிக.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் முரசு சின்னத்தில் வெற்றி பெற்று, திமுகவை விட அதிக இடங்களைப் பிடித்து முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலம் முரசு சின்னம் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்துடன் முரசு சின்னம் தேமுதிகவின் நிரந்தரச் சின்னமானது.
2016 மற்றும் 2021 தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 6 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்த நிலையிலும், 2024 மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவிகித்தைப் பெற்று தேமுதிகவை மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்தின் மனைவியும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜய்காந்த்.
விடுதலைச் சிறுத்தைகள்
தலித் பேந்தர் இயக்கம் தொடங்கிய மலைச்சாமிக்குப் பிறகு, அதன் அமைப்பாளர் பொறுப்பை ஏற்று, 1990-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கினார் தொல். திருமாவளவன்.
1999-இல் விசிக முதன்முதலில் தேர்தல் அரசியலில் நுழைந்தபோது, அதற்கு நிலையான சின்னம் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டியிருந்தது. 1999 மக்களவைத் தேர்தலில் மூப்பனாரின் தமாகாவுடன் கூட்டணி அமைத்தபோது, விசிக வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.
2001-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 8 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தொல். திருமாவளவன்.
2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விலகிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், 2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து ஆலய மணி சின்னத்தில் 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி கண்டது.
மீண்டும் 2011-இல் திமுக கூட்டணியில் இணைந்து இரட்டை மெழுகுவா்த்தி சின்னத்தில் 10 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. மீண்டும் இதே கூட்டணியில் 2014 மக்களவை தேர்தலில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. 2016 பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து, மீண்டும் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டு அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த விசிக, 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொல். திருமாவளவன் மட்டும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் 6 இடங்களில் விசிக போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, விசிக தனது சொந்தச் சின்னமான பானை சின்னத்திலேயே போட்டியிட வைத்து, அந்தச் சின்னத்தைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விசிக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
2024 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டில் விசிகவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் பானை சின்னம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிரந்தர தனிச் சின்னமாக மாறியுள்ளது.
நாம் தமிழர் கட்சி
கடந்த 2010-இல் சீமானால் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதன்முதலில் 234 தொகுதிகளிலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது.
2019 மக்களவைத் தேர்தலிலும் இதே சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2021 பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 6.6% வாக்குகளைப் பெற்று, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது.
2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
சீமான் உச்ச நீதிமன்றம் வரை சென்றும், கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுக்க முடியவில்லை. பின்னர், 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் இந்தக் கட்சி சுமார் 8% வாக்குகளைப் பெற்று, தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றது.
நாம் தமிழர் கட்சி இம்முறை விவசாயி சின்னத்தில் போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் நின்று போட்டியிட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதுவே அமமுக உருவாகக் காரணமானது.
2019 மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை, மாற்றாக பரிசுப் பெட்டி சின்னமே கிடைத்தது. 2021 பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் அமமுக மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டது.
அமமுக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறாததால், குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக, அரசியல் கட்சிகளும் அதன் சின்னங்களுக்கு இடையேயான பிரச்னையானது முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.