தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

'சின்ன விஷயமா இது!'

இனி வாக்குக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் யோசிக்கும் என நம்பலாம். "சின்ன விஷயமா இது!'.

News image

பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:31 am IST

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சி ஆரம்பித்துவிட்டு, என்னுடைய இலக்கு தமிழக சட்டப்பேரவைதான் என்று அறிவித்த அவருடைய ராஜதந்திரத்தை யாரும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற "எலிப்பொறி தேங்காய் துண்டை' புறக்கணித்த அரசியல் ஆளுமை என்று சொல்லிக் கொண்டவர்களெல்லாம், தொட்டுவிடும் தொலைவில் இருந்த அமைச்சர் பதவி என்ற மசால் வடைக்கு மயங்கி, ஆளுநர் ஆட்சி வரக்கூடாதென்ற சப்பை காரணத்தைச் சொல்லி அமைச்சரவையில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

அவர்கள் அணி மாறுவதைத் தவிர்க்க முடியாமல் தி.மு.க. தலைமை அவர்களெல்லாம் தனிக்கட்சி என்று சொல்லிவிட்டு, காங்கிரஸ் மட்டும் முதுகில் குத்திவிட்டது என்று சொல்வது ஏமாற்றத்தை மடைமாற்ற நினைக்கும் நொண்டிச் சாக்கு. தேர்தலின் போது எனக்கும், திமுக-வுக்கும்தான் போட்டி என்று ஜோசப் விஜய் சொன்னதை மறந்து ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததுதான் பரிதாபம்.

இந்தத் தேர்தலில் மற்றொரு அதிசயம் த.வெ.க.வின் விசில் சின்னம். உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டுமானால், பல இடங்களில் த.வெ.க.வின் வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமலேயே வாக்காளர்கள் விசிலடித்தார்கள். த.வெ.க. முழுமையாக வெற்றி பெறாமல் போனதற்கு காரணம், சோரம் போன, தொகுதிக்குள் வராத தங்களுடைய வேட்பாளர்கள்தான் என்பதையும், அவர்கள் யார் என்பதையும் முதல்வர் உளவுத் துறையை வைத்துக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று விஜய் அசாத்திய துணிச்சலுடன் சொன்னாலும், அதுதான் உண்மையானது. வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் விசில் சின்னத்தில் விஜய்யை மட்டுமே பார்த்தார்கள். "மரத்தை மறைத்தது மாமதயானை, மரத்தில் மறைந்தது மாமத யானை' என்ற திருமூலரின் வரிகள் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

தேர்தலும், சின்னமும் இந்தியாவில் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள். ஆரம்பத்தில் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் தனித்தனி வண்ணப் பெட்டிகளிருந்தன. 1962-இல் நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் ஒரே வாக்கு பெட்டி என்ற முறை வந்தது. மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் சேர்ந்து ஒரே சமயத்தில் வாக்குப்பதிவு நடந்ததால், வாக்குச் சீட்டுகள் தனித்தனி வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டன. அந்த வாக்குச்சீட்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி முதலில் சின்னத்துடனும், பின்னர், சுயேச்சை வேட்பாளர்கள் பெயர்கள் அகர வரிசைப்படி சின்னத்துடனும் அச்சிடப்பட்டது.

1982-இல் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் இயந்திரங்களால் தேர்தல் முறை எளிதாக, 2004 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வாக்குச்சீட்டில் உள்ள தேர்தல் சின்னங்களை நடைமுறைப்படுத்தும் சட்டம் எது தெரியுமா?- "தி எலக்ஷன் சிம்பல்ஸ் ரிசர்வேஷன் அண்ட் அலாட்மென்ட் ஆர்டர்- 1968'. இது வருவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள்- 1961 விதிகளின்கீழ் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 1968-இல் ஏற்படுத்தப்பட்ட விரிவான விதிகளின் படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும், பதிவு பெற்ற கட்சிகளுக்கும் "ஒதுக்கப்பட்ட சின்னங்கள்' என்றும், பதிவு பெறாத கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் 'பொதுச் சின்னங்கள்' என்றும் சின்னங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டன. கட்சிகள் தேசிய கட்சிகளென்றும், மாநிலக் கட்சிகளென்றும் அங்கீகரிக்கப்படுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற ஒரு கட்சி வாங்க வேண்டிய வாக்கு சதவீதம் (அ) வெற்றி பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும் இந்த விதிகள்தான்; கட்சித் தாவலை தடுக்கும் அரணாகவும் செயல்படுவதும் இதுதான். நடந்த தேர்தலில் ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்ய அடிப்படைக் காரணம் இந்த விதிகள்தான். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு தாய்க்கழகத்துக்கு திரும்பிய காரணமும் இந்த விதிகள் தரும் நெருக்கடிதான்.

மதிமுகவின் ஆரம்பத்தில் பம்பரம் சின்னத்தில் வைகோ போட்டியிட்டார். திடீரென அவர் திமுகவுடன் இணைந்து தன் மகனுக்கு திருச்சி மக்களவைத் தொகுதியை பெற்றுத்தர மகன் துரை வைகோ சுயமரியாதை முரசறிந்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க முடியாது என தீப்பெட்டி சின்னத்தில் நின்றார். இதனால், உஷாரான திமுக, சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னம்தான் என கறாராக சொல்லிவிட்டது.

நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாதபடி, திமுகவினால் நிர்ப்பந்திக்கப்பட்டோம்; இனி நாங்கள் தனித்து நின்றுதான் போட்டியிடுவோம் என இப்போதும் கூறும் வைகோ, கருணாநிதியின் இறுதிக் காலத்தில், "நான் இனி எப்போதும் உங்கள் மகனுடன்தான் இருப்பேன்' என்று சொன்ன வாக்குறுதியை மறந்துவிட்டு த.வெ.க. கூட்டணிக்கு இப்போதே துண்டு போட வைத்ததும் இந்த விதிகள்தான்.

ஏணி சின்னத்தில் தங்களது ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி அடைந்த முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றதைப் பார்த்துக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் திமுக, "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என அண்ணா வழியில் தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறது.

1980-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, நான் நண்பர்களென நம்பியவர்களின் துரோகத்தால் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனேன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டநாதக் கரையாளரை எதிர்த்து நான் தொடுத்த வழக்கில் எழுப்பிய கேள்வி என்ன தெரியுமா?

அப்போது வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் தரவேண்டிய உறுதிமொழிகள் 1.அவர் ஒரு இந்திய குடிமகன்; 2. வயது 25 முடிந்து விட்டது (மாநிலங்களவைக்கு வயது 30). 3. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் படி உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன்; 4. தனித்தொகுதி என்றால் இந்தப் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் நான்; மற்றும் 5. இந்தக் கட்சியால் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளேன் என்பன ஆகும்.

இந்த உறுதிமொழிகளில் முதல் நான்கும் பொய்யென்று நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் தேர்தல்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. அதிமுகவின் உறுப்பினராக இல்லாத சட்டநாதக் கரையாளர் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட முடியாது; அவர் தன்னுடைய தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த லோக் தள் (மக்கள் கட்சி) உறுப்பினர் என்றுதான் சட்டப்பேரவையில் பதிவு செய்து கொண்டார். இது சட்டத்தை ஏமாற்றும் செயல் என வாதிட்டேன்.

முதலில் தமிழகத்தில்தான் பட்டியலினத்தவர் என்ற போலிச் சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பையும், தனக்கு 30 வயது முடியாத நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வலம்புரி ஜானின் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பையும், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸôம் தேர்தல்களில் அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் நபர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று ரத்து செய்த தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி வாதிட்டேன்.

இதுபோல், அதிமுகவில் உறுப்பினரல்லாத நபர் போலியாக, நான் அந்தக் கட்சியில் உறுப்பினர் என்று சொல்வது அல்லது அந்தக் கட்சியை தேர்தல் மற்றும் கூட்டணி லாபங்களுக்காக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியினர் என போலியாக சான்று கொடுப்பதாலோ மட்டும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராக மாட்டார்கள் என்றும் வாதிட்டேன். ஆனால், கட்சி ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தை நான் கேள்வி கேட்க முடியாதென நீதிமன்றம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால், இந்த விதிகள் 46 ஆண்டுகளாக திருத்தப்படவே இல்லை. வேட்பாளர் மனுவில் "நான் இந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர், என் உறுப்பினர் அட்டையை இணைத்துள்ளேன்; இந்தக் கட்சியால் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்' என்று சொல்லும் வேட்பு மனு படிவம் மாற்றப்பட வேண்டும். இல்லாதவரை இந்தக் கூத்துகள் குறையாது; கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

இப்போது இருக்கும் விதிகளால் நிலைமை சிறிது முன்னேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தவெகவின் அமைச்சரவையில் மதிமுக சேர முடியாமல் போனதற்கு இதுதான் காரணம்.

இந்தத் தேர்தல், தேர்தல் சின்ன விதிகளை தூக்கிப் பிடித்தது மட்டுமல்ல; தமிழர்கள் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்கிற அவப்பெயரை அடித்து நொறுக்கி விட்டது. இனி வாக்குக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் யோசிக்கும் என நம்பலாம். "சின்ன விஷயமா இது!'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.