

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர்.
இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் திமுக தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.
கூட்டணி நீடிக்குமா அல்லது கழன்று விடுமா என்ற சூழலில் கடந்த டிச. 3 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி இன்னும் வலுவாகத்தான் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருந்தனர்.
இதனிடையே, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆகாது எனத் திட்டவட்டமாக நிகழ்ச்சியொன்றில் கூறிவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னால் செய்யும் இதுபோன்ற ‘ஸ்டண்ட்கள்’ கடும் பின்னடைவையே கொடுத்திருக்கின்றன. இந்தப் போக்கால் காங்கிரஸ் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கின்றன.
மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்தும் அப்போதும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு பிரச்சினையால், ‘நீ உன் வேலையைப் பார்; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ எனத் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தனது ஸ்டைலில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் மமதா. மேற்கு வங்கத்தில் திரிணமூல் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, ஹரியாணா, தில்லி பேரவைத் தேர்தல்களிலும் இதே வேலையைப் பார்த்தது காங்கிரஸ். இதேபோலத்தான் 2024 ஆம் ஆண்டு ஹரியாணாவில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக இடங்களில் வெற்றி பெறும் என்று பலரும் ஆருடம் கூறியிருந்த நிலையில், முன்னாள் முதல்வர் பூபேந்தர் ஹூட்டா, முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான குமாரி ஷெல்ஜா இருவருக்கும் இடையேயான உள்கட்சி மோதல், தொகுதி பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் ஹரியாணாவில் காங்கிரஸின் வெற்றி கை நழுவிப்போனது. அந்தத் தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது காங்கிரஸ்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் - ஆம் ஆத்மி இரண்டு கட்சிகளும் தில்லி பேரவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்டன. இது பாஜகவின் வெற்றியை மிகவும் எளிதாக்கியது. இதன் விளைவு 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் ஆட்சியைக் காலி செய்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 70 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட காங்கிரஸுக்கு ஒரு தொகுதியும் கை கொடுக்கவில்லை.
ஆம் ஆத்மியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் உள்பட வலுவான தலைவர்கள் போட்டியிட்ட 17-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் மிகவும் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டன.
புதுதில்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் சர்மா, அப்போதைய தில்லி முதல்வர் கேஜரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், அந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் 4,568 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்திருந்தார். இதேபோல, ஜங்புராவில் போட்டியிட்ட தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பாஜகவின் தர்விந்தர் மார்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மேயரும் காங்கிரஸ் வேட்பாளருமான ஃபர்கத் சூரி 7,350 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
திமர்பூர், பட்லி, முந்த்கா, நங்கோலி ஜாட், மதிப்பூர் என கிட்டத்தட்ட 22 தொகுதிகளில் ஆளும் ஆத்மியின் வெற்றியை சீர்குலையச் செய்தது காங்கிரஸ்.
இதேபோல, பிகாரில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிதீஷ் குமாரைக் காலி செய்துவிட்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், ‘ஆட்சியில் பங்கு; முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்விகளுக்கெல்லாம் பளிச்செனப் பதிலளிக்காமல் காங்கிரஸ் குழப்பியது. இந்தக் குழப்பத்தால் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் காங்கிரஸும் பரஸ்பரம் நம்பிக்கையை இழந்தன. எதிர்பாராத விதமாக பல தொகுதிகளில் ஆர்ஜேடி தோற்றது. காங்கிரஸும்கூட போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
முன்னதாக, சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலில் பூபேஷ் பாகல் - டி.எஸ். சிங் தியோ இடையேயான உள்கட்சி மோதல், ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையேயான உள்கட்சி பூசல் போன்றவை காங்கிரஸுக்கு பின்னடைவாக அமைந்தது. மேற்கு வங்கத்தில் 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் இதேபோல தனித்து 91 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. மாறாக 9.32 சதவிகித வாக்குகளை இழக்கத்தான் செய்தது.
தமிழ்நாட்டில்...
தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் - திமுக இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் துவங்கி 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸும் திமுக-வும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அத்தனை இடங்களிலும் தோற்றது.
பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், இளைஞர் அணி மாநாடு, மகளிர் மாநாடு என எதையாவது கூட்டி பார்த்திருக்கிறோமா? தேர்தல் வந்தால் ஏதாவது ஒரு கூட்டணியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர் தேர்தலை வேண்டா வெறுப்பாக சந்திப்பதைத்தான் காண முடிகிறது.
அதேவேளையில், ‘இறுமாப்புடன் இருநூறு வெல்வோம்’ எனத் தொடர்ந்து கூறிவரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் அதிக இடங்களை ஒதுக்கிவிட்டால் பெரும்பான்மைக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இழுபறி தொடர்ந்து வருகிறது.
1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு இதுவரை ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை. 1984-ல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது ஏற்பட்ட அனுதாப அலைகூட தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சியைப் பிடிக்கத்தான் காரணமாக இருந்தது. அப்போது 61 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, 1991-ல் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோதும் காங்கிரஸ் 60 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. 2006-ல் 34 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸின் கூட்டணி தயவில், வெறும் 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக ஆட்சி நடத்தியது. ஆனால், மேலிட உத்தரவால் ஆட்சியில் பங்கு, அதிகாரம் பற்றி அப்போது காங்கிரஸில் யாரும் பேசவில்லை.
கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்த பின்னரும் அதிமுகவுக்கான தனி செல்வாக்கு தொடர்ந்தாலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை, அதிமுகவுக்கான பின்னடைவாகக் கூறப்படுகிறது. அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக் கூடிய வலுவான கூட்டணியாக திமுக - காங்கிரஸ் கூட்டணி கருதப்படுகிறது.
ஆட்சியில் பங்கு குறித்து போர்க் கொடியைத் தூக்கிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம், “அவ்வளவு தில்லு இருந்தால் திமுக கூட்டணியில் பெற்ற வாக்குகளில்தானே எம்.பி. ஆனீர்கள்..” எனப் பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் தற்போதைய திமுக அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன், ரகுபதி உள்ளிட்டோர் அவரவர் தொகுதிகளில் வெறும் 3,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலேயே வென்றிருந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்றிருந்தனர். ஒருவேளை திமுக - காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போயிருந்தால் கண்டிப்பாக திமுகவுக்குப் பெருத்த பின்னடைவைக் கொடுத்திருக்கும்.
விஜய்க்கு ‘கை’கொடுக்குமா காங்கிரஸின் உத்தி?
ஒருவேளை திமுக - காங்கிரஸ் ஏற்படாவிட்டால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை. கடைசி வாய்ப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டுமே இருக்கிறார். தற்போதைய சூழலில் காங்கிரஸ் 60 முதல் 80 இடங்களில் போட்டியிட்டாலும் பாஜக எதிர்ப்பு வாக்குகள், திமுகவினருக்குச் செல்லக்கூடிய சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டுமே பெற முடியுமே தவிர வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றே கருதப்படுகிறது. காங்கிரஸை பொருத்தவரை தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடியில் தேர்தல் முடிவுகளில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். விஜய்யுடன் சேரும்போது வாக்கு சதவிகிதம் மட்டும் உயருவதுடன், திமுகவுக்கான வெற்றியைத் தடுமாறச் செய்ய முடியும்.
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி என நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் என மூன்று மாநிலங்களிலும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கூட்டம் கூடும் ரசிகர்களின் ஓட்டாக மாறுமா? என்பது சந்தேகமாக இருந்தாலும், விஜய்யின் பின்னால் இருக்கும் மக்கள் சக்தி மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதிப்படுத்திவிட்டனர். ஆனால், காங்கிரஸின் பிடிவாதம் தில்லி, ஹரியாணா போல இங்கே ஒருவேளை ஆளுங்கட்சிக்கு ஆபத்தாகக்கூட முடியலாம்.
இந்த விவகாரத்துக்கு மத்தியில் சமீபத்தில் நீலகிரியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். அப்போது அவரை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள் தவிர கூட்டணிக் கட்சியினர் யாரும் வரவில்லை. இதேபோல, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எப்போது பேசினாலும், அவர் பேசும்போதும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றாலும், ராகுலுக்குப் பக்கபலமாக இருப்பதில் திமுக மக்களவை உறுப்பினர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
ராகுலுக்கு ஆதரவாக, கனிமொழி, டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆ. ராசா உள்ளிட்ட எம்பிக்கள் இருப்பார்கள். ஆனால், சமீபத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தது திமுகவும், சமாஜவாதி கட்சி மட்டும்தான். ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசும் போது, வழக்கமாக ராகுலுக்கு ஆதரவாக இருக்கும் திமுக எம்பிக்கள் யாருமே அவையில் இல்லை. அனைவருமே ஆப்சென்ட். இது காங்கிரஸுக்கு திமுக கொடுக்கும் ஹின்ட் (hint) போல தோன்றலாம். ஹரியாணா, தில்லி, பிகார் போன்று தமிழகத்திலும் பிரச்சினைகள் தொடர்ந்தால் திமுக - காங்கிரஸ் அணி பாதிக்கப்படலாம்.
ஸ்பாயில் தி பார்ட்டி
கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ‘spoil the party’ (ஸ்பாயில் தி பார்ட்டி) என்ற வாசகத்தைப் பயன்படுத்துவது உண்டு. அதாவது லீக் சுற்றில் தோற்ற அணிகள் இறுதி வாய்ப்பில் இருக்கும் அணிகளையும் சேர்த்து தோற்கடித்து போட்டியிலிருந்து வெளியேற்றி அவர்களின் ‘கொண்டாட்டத்தையும் கெடுத்து விடுவோம்’ எனக் கூறுவதுபோல, 75 ஆண்டுகள் பழைமையான கட்சி என நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள திமுக, கூட்டணியில் இல்லாமல், தமிழக பேரவைத் தேர்தலில் வென்றதில்லை என்ற நிலையில்தான் இருக்கிறது. திமுகவின் party-ஐ காப்பாற்றுமா? அல்லது spoil செய்யுமா காங்கிரஸ்?
‘பழம் நழுவி பாலில் விழவில்லை; தேனில் விழுந்து விட்டதென’ கட்சி ஆரம்பித்து இருபது ஆண்டுகளில் முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. இனி 'கை' நழுவினாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்று திமுக நினைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? சில நாள்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள், பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.