கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என இன்று அறிவிப்பாரா பிரதமர் மோடி?

அதிமுக கூட்டணி ஆட்சி என்றோ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாதது பற்றி...

News image
மோடியுடன் பழனிசாமி...- EPS
Updated On :11 மார்ச் 2026, 8:43 am

ததாகத்

திருச்சியில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக என்ன சொல்லப் போகிறார்?

கடந்த முறை மதுராந்தகத்தில் பேச வருவதற்கு முன் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று எக்ஸ் பதிவிட்டுப் புறப்பட்டார் மோடி; தொடர்ந்து, பிரசாரக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் என்றும் அறிவித்தார்.

கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி பற்றி அறிவிக்கும்போது, தேசிய அளவில் மோடி தலைமையிலும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததுடன் சரி, பிறகு தமிழ்நாட்டின் கூட்டணித் தலைமை பற்றி வேறு எவ்விதமான செய்தியும் இல்லை.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றோ, எடப்பாடி பழனிசாமிதான் அணியின் முதல்வர் வேட்பாளர் என்றோ பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் யாரும் இதுவரை வாய் தவறிக்கூட சொல்லவில்லை. சில தமிழ்நாட்டுத் தலைவர்கள் மட்டும் குறிப்பிட்டு வருகின்றனர்.

கடந்த முறை மதுராந்தகத்தில் பேசியபோது, தமிழ்நாடு இப்போது பாரதிய ஜனதா – தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விரும்புகிறது என்றும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது என்றும்தான் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமிதான் பேசும்போது, அதிமுக ஆட்சியமைக்கும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஒருக்காலும் ஏற்க மாட்டேன் என்ற அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனும் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்துவிட்டார்.

இதனிடையேதான், பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் திடீரென முதல்வர் நிதீஷ் குமார், முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவு செய்து மாநிலங்களவைக்குத் தேர்வாகிறார். தேர்தலின்போது, மிகத் தாமதமாகவே நிதீஷ் குமார்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தனர். அடுத்த சில மாதங்களிலேயே இப்போது அவர் விரும்பியோ, வேறு வழியின்றியோ மாற்றப்பட்டு எம்.பி.யாகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சில நாள்கள் முன், திமுகவில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இணைந்த விழாவில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின், பிகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான் நாளைக்குப் பழனிசாமிக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், “அதிமுகவுக்குப் பாரதிய ஜனதா நன்மையா செய்யப் போகிறது? பழனிசாமிக்கு ஏதாவது டவுட் இருந்தால் பிகாரில் நடப்பதை பழனிசாமி பார்க்க வேண்டும். 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமாரையே பா.ஜ.க. பந்தாடிவிட்டது. இன்றைக்கு நிதீஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான் நாளைக்கு பழனிசாமிக்கும். அதற்கு அவர் முதலில் வெற்றி பெற வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. எனக்குக் கிடைத்த தகவல்படி, அதிமுகவில் பழனிசாமிக்குப் பதிலாக ஏற்கெனவே வேறு ஒருவரைப் பொதுச் செயலராக பாரதிய ஜனதா தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிசாமியை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பாரதிய ஜனதா வைத்திருக்கும். பிறகு அவரைத் தூக்கிவிடுவார்கள். அதுதான் நடக்கப் போகிறது” என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பல்வேறு அரசு திட்டங்களைத் தொடக்கிவைக்கத் திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றுகிறார். அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதுவரையில் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றோ, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றோ பாரதிய ஜனதா கட்சியின் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உயர் தலைவர்கள் யாரும் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டிலுள்ள பாரதிய ஜனதா தலைவர்களில் சிலர் மட்டும்தான் குறிப்பிட்டுவருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இறுதியில் சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்று சந்தித்தபின் செய்தியாளர்களுடன் பேசியபோதுகூட, அதிமுக ஆட்சி என்றோ, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றோ குறிப்பிடாத மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திருச்சியில் நேற்று செய்தியாளர்களுடன் பேசும்போது முதல் முறையாக, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

மதுராந்தகம் வருமுன் சொன்னதைப் போல தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் பற்றி எக்ஸ் தளத்தில் முன்னதாக எதுவும் குறிப்பிடவில்லை மோடி.

திருச்சிக்கு வடக்கே சிறுகனூரில் சில நாள்கள் முன் நடந்த திமுக மாநாட்டில் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். திருச்சிக்குத் தெற்கே பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் என்ன சொல்லப் போகிறார் பிரதமர் நரேந்திர மோடி? அமைச்சர் பியூஷ் கோயல் முதல் முறையாகச் சொன்னதை மேடையில் அறிவிப்பாரா?

summary

Regarding the fact that neither the AIADMK government nor Edappadi Palaniswami will be the chief ministerial candidate has yet been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.