கடவுள்களுடன் சாய்பாபா இருக்கக் கூடாது: சனாதன ரக்க்ஷக் தளத் தலைவர் கைது

10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய சனாதன ரக்க்ஷக் தளத் தலைவர் அஜய் ஷர்மா கைது
கடவுள்களுடன் சாய்பாபா இருக்கக் கூடாது: சனாதன ரக்க்ஷக் தளத் தலைவர் கைது
Published on
Updated on
1 min read

கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய சனாதன ரக்க்ஷக் தளத் தலைவர் அஜய் ஷர்மா கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பல சாய்பாபா கோயில்களில் உள்ள சாய்பாபாவின் சிலைகளை அகற்றுமாறு கோயில் நிர்வாகிகளை, சனாதன ரக்க்ஷக் தளத்தின் தலைவர் அஜய் ஷர்மா வற்புறுத்தியுள்ளார். இறந்தவர்களை கடவுள்களுடன் சேர்த்து வைத்து வழிபடுதல் கூடாது என்று முழங்கிய அஜய் ஷர்மா, கோயில்களில் உள்ள சாய்பாபா சிலைகளை அகற்றுவதை விடியோ எடுத்து, அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை, அவர் அகற்றியுள்ளார். கோயில்களில் சிறிய அளவிலான சாய்பாபா சிலைகளை அகற்றியும், பெரியளவிலான சிலைகளை வெள்ளைத் துணியால் மூடியும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

கடந்த வாரத்தில், பகவான் புருஷோத்தம் திரியம்பகேஷ்வர் தர்பார் கோயிலில் இருந்து சாய்பாபா சிலையை அகற்றும் விடியோவையும், பாரா கணேஷ் கோயிலில் இருந்தும் சாய்பாபா சிலையை அகற்றும் விடியோவையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தங்கள் கோயில்களில் இருந்தும் சாய்பாபா சிலைகளை அகற்றுமாறு அஜய் ஷர்மா கட்டாயப்படுத்துவதாக, 2 அர்ச்சகர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அர்ச்சகர்களின் புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அஜய் ஷர்மாவை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அஜய் ஷர்மா கூறியதாவது ``பகவத் கீதையிலோ புராணத்திலோ சாய்பாபாவைப் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை; மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, கடந்த நான்கு ஆண்டுகளாக நான் முயற்சி செய்து வருகிறேன்.

சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும், இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் அவரை வணங்கவில்லை என்று சொல்லவில்லை. இறந்தவர்கள் தனிப்பட்ட முறையில் வணங்கப்பட வேண்டும்; கடவுள்களுடன் அல்ல. அவ்வாறு செய்ய விரும்புவோர் என்னிடமிருந்து சிலைகளை எடுத்து தங்கள் வீடுகளில் வைத்து வழிபடலாம்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com