லட்டு விவகாரம்: சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைப்பு!

லட்டு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தது பற்றி...
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திர பிரதேச காவலர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டில் கலப்படம்?

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் கடந்த ஜூலை மாத ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ கண்காணிப்பில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில், அவரால் பரிந்துரைக்கப்படும் இரு அதிகாரிகள், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் இரு அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் ஒரு மூத்த அதிகாரி குழுவில் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசு நியமித்த விசாரணைக் குழு, சிபிஐ குழுவிடம் விசாரணை அறிக்கையை ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதனை மாநில அதிகாரிகளின் நேர்மைக்கு எதிரானதாக கருத வேண்டாம், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்காக மட்டுமே குழு அமைத்துள்ளோம் என்றனர்.

சந்திரபாபு செயலுக்கு அதிருப்தி

முன்னதாக கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

'திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன?

முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்(சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்?

பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா? இதனை பொதுவெளியில் பேசியது ஏன்?

மேலும், நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என இதில் குறிப்பிடப்படவில்லை.

சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கிவைக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com