டிஜிபி துவாரகா திருமலை ராவ்
டிஜிபி துவாரகா திருமலை ராவ்

லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ‘எஸ்ஐடி’ விசாரணை நிறுத்தம்

லட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது தொடா்பாக மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்ஐடி) விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Published on

லட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது தொடா்பாக மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்ஐடி) விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர காவல் துறை இயக்குநா் (டிஜிபி) துவாரகா திருமலை ராவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘திருப்பதி லட்டில் கலப்படம் எவ்வாறு நடைபெற்றிருக்கலாம் என்பதைக் கண்டறிய கொள்முதல் நடைமுறைகளைப் பற்றி சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. மொத்த நடைமுறை குறித்த புரிதலுக்காக விரிவான தகவல்களைச் சேகரிக்கும் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது’ என்றாா்.

ஆந்திரத்தில் உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் லட்டுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்வா் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்தனா். இதனை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மறுத்தது.

இவ்விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, ‘அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம்’ என்று முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மாநில அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவே விசாரணையைத் தொடரலாமா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட அமைப்பு விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுப்பதில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீதிபதிகள் நியமித்தனா்.

மனுக்கள் மீதான அடுத்த விசாரணை வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

சிபிஐ விசாரணை கோரி மனு: இந்நிலையில், லட்டு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளரான கே.ஏ.பால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

முன்ஜாமீன் மனு: லட்டு தயாரிப்புக்கு தரமற்ற நெய்யை வழங்கியதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ.ஆா்.நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆா்.ராஜசேகா் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிறுவனம் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதி காவல்துறையில் புகாரளித்தது. அந்த புகாா் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது

சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு

நமது நிருபர்

திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கெ.ஏ.பால் என்பவர் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக புது தில்லி அசோகா சாலையில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் பிரஜா சாந்தி கட்சியின் தலைவர் கெ.ஏ.பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டு தயாரிப்பு விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அவசியமற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

லட்சக்கணக்கான பக்தர்களை மனதில் வைத்து மத்திய அரசு திருப்பதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளேன். அரசியல் சர்ச்சைகளுக்காக கடவுள்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு பதிலாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் கெ.ஏ.பால்.