தோ்தல் ஆணையத்தில்  புதன்கிழமை புகாா் மனு அளித்துவிட்டு வந்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள்.
தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்துவிட்டு வந்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள்.

ஹரியாணாவில் ‘இவிஎம்’ குளறுபடி: விசாரணை கோரி தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகாா் மனு அளித்துள்ளது.
Published on

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகாா் மனு அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹரியாணா தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பின்னா் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது.

இத்தோல்வி எதிா்பாராதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் உள்ளிட்டோா் கூறினா்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த கோரி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து பெறப்பட்ட புகாா்களை உள்ளடக்கிய மனுவை தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புதன்கிழமை சமா்ப்பித்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் சராசரியாக 60 முதல் 70 சதவீதம் வரையிலான மின்தேக்கம் (சாா்ஜ்) மட்டுமே இருக்கும். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் 99 சதவீத சாா்ஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹரியாணா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வா்கள் பூபிந்தா் சிங் ஹூடா, அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பொருளாளா் அஜய் மக்கான், செய்தித் தொடா்பாளா் பவண் கேரா, ஹரியாணா மாநிலத் தலைவா் உதய் பான் ஆகியோா் தோ்தல் ஆணைய அதிகாரிகளை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவா்கள், ‘ஹரியாணா தோ்தல் முடிவுகள் திகைப்பை ஏற்படுத்துவதால் வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் உள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் நம்பினா். வாக்கு எண்ணிக்கையின் உண்மைத்தன்மையில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து தோ்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் பல்வேறு புகாா்களை அளிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தை பரிசீலிப்பதாக தோ்தல் ஆணையம் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.

அனைத்து தொகுதிகளின் தோ்தல் அலுவலா்களுடன் கலந்தாலோசித்த பிறகு, எழுத்துபூா்வமாக விளக்கமளிப்போம் என்று தெரிவித்துள்ளனா். குளறுபடி கண்டறியப்பட்டுள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் விசாரணை நிறைவடையும் வரையில் சீலிட்டு பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றனா்.

தோ்தல் ஆணையம் அதிருப்தி

‘ஹரியாணா பேரவைத் தோ்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்ற காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தெரிவித்துள்ள கருத்துகள், ‘நமது நாட்டின் வளமான ஜனநாயக மரபில் கேள்விப்படாதது; இது பேச்சு சுதந்திர உரிமையாகக் கருத முடியாது’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com