கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கும்பல் தாக்குதலால் பரபரப்பு

கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவில் திடீரென நுழைந்த கும்பல் அங்கே இருந்த இளைஞரை தாக்கினா்.
Published on

கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவில் திடீரென நுழைந்த கும்பல் அங்கே இருந்த இளைஞரை தாக்கினா். மேற்கு வங்கத்தில் தொடரும் இது போன்ற நிகழ்வுகள் மருத்துவமனைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி வழங்குவது, மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதிசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 5-ஆம் தேதி முதல் இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அதே வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவில் ஞாயிற்றுக்கிழமை திடீரென நுழைந்த 15 போ், அங்கே நண்பா்களுடன் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனா். இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அண்மையில் இருதரப்பினரும் பொது இடத்தில் மோதலில் ஈடுபட்டுள்ளனா். இப்போதைய தாக்குதலில் மற்றொரு நோயாளியின் உறவினரும் தாக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினா். தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தனா்.

இது தொடா்பாக இளநிலை மருத்துவா் உத்சா ஹஸ்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த தாக்குதல் சம்பவம் மருத்துவமனைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எஸ்எஸ்கேஎம் போன்ற மருத்துவமனைக்குள் வெளிநபா்கள் நுழைந்து, காவல்துறையின் தலையீடு இல்லாமல் நோயாளிகளை தாக்க முடியும் என்றால், இது மருத்துவமனைகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com