
பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3வது நபருக்கு அக். 21ஆம் தேதி வரை விசாரணைக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் இன்று (அக். 14) உத்தரவிட்டது.
பாபா சித்திக் கொலை வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொரு நபரை மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
நேற்று கைதான இருவரில் ஒருவருக்கு அக். 21 வரை காவல் விதிக்கப்பட்டிருந்தது. மற்றொரு நபர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்பதால், வயதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
திட்டமிட்டுக் கொடுத்தவர் கைது
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை (அக். 12) இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்தது.
இதில் குர்மாயில் சிங்கிற்கு அக். 21ஆம் தேதி வரை விசாரணைக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. தர்மராஜ் சிங் காஷ்யப் 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் எலும்பு மற்றும் திசு பரிசோதனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தப் பரிசோதனையின் மூலம் நபரின் வயதை அறிய முடியும்.
இந்நிலையில், பாபா சித்திக் கொலை வழக்கில் புணேவைச் சேர்ந்த பிரவீன் லோன்கர் (28) என்பவரை மும்பை குற்றப் பிரிவு காவல் துறையினர் இன்று (அக். 14) கைது செய்தனர். இவர், பாபா சித்திக்கை கொலை செய்ய சதித்திட்டம் வகுத்துக்கொடுத்த ஷுபம் லோன்கரின் சகோதரர் ஆவார். சித்திக்கை கொலை செய்ய தர்மராஜ் காஷ்யப்பையும் ஷிவ்குமார் கெளதமையும் நியமித்தது ஷுபம் லோன்கரும் பிரவீன் லோன்கரும்தான்.
இதையும் படிக்க | பாபா சித்திக்கின் மகனைக் கொல்லவும் திட்டம்! குற்றவாளிகள் வாக்குமூலம்
கைதானவர் சிறுவன் அல்ல
பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரில், தர்மராஜ் காஷ்யப் 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்பட்டது. இதனால் குர்மாயில் சிங்கிற்கு மட்டும் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தர்மராஜ் காஷ்யப்பிற்கு வயதைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எலும்புகளின் இணைப்பு விகிதத்தை மதிப்பிடுவதன் மூலம் வயதைக் கண்டறியலாம்.
இதனிடையே மும்பை காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் காஷ்யப்பிற்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் 18 வயது பூர்த்தி அடைந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதனால், தர்மராஜ் காஷ்யப்பிற்கும் போலீஸ் காவல் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.