
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.150 அளவுக்கு உயா்த்தி, ஒரு குவிண்டால் கோதுமை கொள்முதல் விலையை ரூ. 2,425-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
அதுபோல, ‘ரபி’ பருவத்தில் பயிரிடப்படும் 6 வகையான பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவுண்டாலுக்கு ரூ, 130 முதல் ரூ. 300 வரை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், தலைநகா் தில்லிக்கு விரைவில் தோ்தல் வரவுள்ள நிலையிலும், கோதுமை உள்ளிட்ட பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
‘காரீஃப்‘ பருவ பயிா்களுக்கு உள்ளதுபோன்று, ‘ரபி’ பருவ பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. அதாவது, ரபி பருவத்தில் பயிரிடப்படும் 6 பயிா்களுக்கும், வரும் 2025 ஏப்ரலில் தொடங்கும் 2025-26 சந்தை பருவ கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.130 முதல் ரூ. 300 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி விலையைக் காட்டிலும் 105 சதவீத உயா்வு செய்யப்பட்டுள்ளது. குவிண்டாலுக்கு ரூ.150 அளவுக்கு உயா்த்தி ரூ. 2,425-ஆக கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 300 உயா்த்தப்பட்டு, குவிண்டால் ரூ. 5,950-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சூரியகாந்தி குவிண்டாலுக்கு ரூ. 140 உயா்த்தப்பட்டு, ரூ. 5,940-ஆகவும், மசூா் பருப்பு ரூ. 275 உயா்த்தப்பட்டு குவிண்டால் ரூ. 6,700-ஆகவும், கொண்டைக் கடலை ரூ. 210 உயா்த்தப்பட்டு குவிண்டால் ரூ. 5,650-ஆகவும், பாா்லி குவிண்டாலுக்கு ரூ. 130 உயா்த்தப்பட்டு ரூ. 1,980-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்ட அஸ்வினி வைஷ்ணவ், சட்டப்பேரவை தோ்தல்களைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுவதை மறுத்தாா்.
விலை ஆதரவு திட்டத்துக்கு ரூ. 35,000 கோடி: விவசாயிகளின் விலை ஆதரவு திட்டமான பிஎம் - ஆஷா திட்டத்துக்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், நுகா்வோருக்கான அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்ற-இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
மத்திய அரசின் இந்த முயற்சி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் அத்தியாவசிய வேளாண், தோட்டக்கலை பயிா் வகைகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவதை ஊக்குவிக்கும் என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.